search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி சத்யா கொலை"

    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சதீஷ், மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது.
    • மாணவி படித்த தனியார் கல்லூரி, மாணவியின் தோழிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்திய பிரியா (வயது20). இவர் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (23). இந்த நிலையில் சத்திய பிரியாவை, சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    தொடர்ந்து மாணவியின் பின்னால் சுற்றி தொந்தரவு செய்து வந்தார். ஆனாலும் அவரது காதலை மாணவி சத்திய பிரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 13-ந்தேதி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி சதீசை கைதும் செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து ரெயில்வே போலீசார் தங்களிடம் இருந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பான விசாரணையை கடந்த 15-ந்தேதி பிற்பகலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடங்கினார்கள். முதலில் சம்பவம் நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்பிறகு சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசார், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரெயில் என்ஜின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். ரெயில் நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சதீஷ், மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. தற்போது முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அடுத்த கட்டமாக மாணவி சத்தியபிரியாவின் தோழிகள், குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்து டி.வி. மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்கள் ஆகியோரிடம் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி இன்று ஆலந்தூர் போலீசார் குடியிருப்பில் வசிக்கும் மாணவியின் தாயாரும், போலீஸ் ஏட்டுமான ராமலட்சுமி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார்கள்.

    தொடர்ந்து மாணவி படித்த தனியார் கல்லூரி, மாணவியின் தோழிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு சதீஷின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்துகிறார்கள்.

    சதீஷ், மாணவி சத்திய பிரியாவை பின்தொடர்ந்து சென்றது முதல் அவரை ரெயில் முன்பு தள்ளி விட்டது வரை அனைத்து தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி சத்தியபிரியா தள்ளிவிடப்பட்ட மின்சார ரெயிலின் என்ஜின் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி சத்திய பிரியாவை கொலையாளி சதீஷ் எப்படி தாக்கி தள்ளினார். எவ்வளவு தூரத்தில் இருந்து அவர் விழுந்தார்? மாணவி மீது ரெயில் மோதிய பின்னர் எவ்வளவு தூரத்தில் நின்றது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.

    ரெயில் என்ஜின் டிரைவரின் தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். இந்த தகவல்களும் கொலையாளி சதீசுக்கு எதிராக பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே சிறையில் உள்ள கொலையாளி சதீசிடம் மேலும் பல தகவல்களை பெற அவரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    வரும் வாரத்தில் சதீஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்காக முறைப்படி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.

    சதீசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • புழல் சிறையில் சதீசுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • 8 மணி நேரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் போலீசார் மாறி மாறி பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    மாணவி சத்யாவை கொடூரமாக கொலை செய்த கொலையாளி சதீஷ், புழல் சிறையில் அடைக்கப்ட்டுள்ளான். அங்கு சக கைதிகளால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று சிறைத்துறை அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். சதீஷ் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஏற்கனவே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதனை கருத்தில்கொண்டே புழல் சிறையில் சதீசுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் போலீசார் மாறி மாறி பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

    சிறையில் சதீஷ் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மாணவி சுவாதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் இருந்தபோதுதான் மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான். அதே பாணியில் சதீசும் தற்கொலை முடிவை எடுத்துவிடக் கூடாதே என்கிற அச்சம் சிறை துறையினருக்கு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சதீசை 24 மணி நேரமும் சிறை காவலர்கள் தொடர்ந்து கண்காணித்தப்படியே உள்ளனர்.

    • 4 தனிப்படையினர் மாணவி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மாணவி சத்யா கொலை வழக்கை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக நடத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடந்த 13-ந்தேதி மதியம் மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்துவிட்டு தப்பிய கொடூர கொலையாளி சதீசை ரெயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி துரைப்பாக்கத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    சதீசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக் தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். டி.எஸ்.பி. புருஷோத்தமன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    4 தனிப்படையினர் மாணவி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி சத்யா கொலை வழக்கை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக நடத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இதுபோன்ற முக்கியமான வழக்குகளை 3 மாதத்தில் முடிப்பதற்கு எப்போதுமே திட்டமிடுவோம்.

    அந்த வகையில் சத்யா கொலை வழக்கும் 3 மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். இந்த வழக்கில் கொலையாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவோம் என்று தெரிவித்தார்.

    மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மெட்ரோ ரெயில் நிலைய பகுதியிலும் கொலை சம்பவம் நடந்த இடம் நோக்கி கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இந்த 3 கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ரெயில்வே போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர்.

    சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும் இந்த வீடியோ காட்சிகளை போட்டு பார்த்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளில் மாணவி சத்யா, கொலையாளி சதீஷ் ஆகியோர் ரெயில் நிலையத்துக்குள் வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    ஒரு கண்காணிப்பு கேமராவில் மாணவி சத்யாவை சதீஷ் ரெயிலில் தள்ளி விடும் காட்சியும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலை சம்பவம் நடந்தபோது ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். சதீஷ், சத்யாவை பின் தொடர்ந்து சென்றது முதல், கொலை செய்தது வரை இந்த வழக்குக்கு தேவையான அனைத்து முக்கிய ஆதாரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முழுமையாக திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த வழக்கில் மாம்பலம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணை நேற்று காலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும், ரெயில்வே போலீசார், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதனை வைத்து அடுத்தகட்ட விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளனர்.

    மாணவி கொலையில் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பலரை இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சாட்சிகள் தெரிவிக்கும் தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்படுகிறது. மாணவிக்கு சதீஷ் தொடர்ச்சியாக கொடுத்த தொந்தரவுகள் பற்றியும் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் கிடைத்த தகவல்களும் வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இப்படி மாணவி சத்யா கொலையில் கொலையாளி சதீசுக்கு எதிராக அனைத்து வலுவான ஆதாரங்களும் கிடைத்திருப்பதால் உச்சப்பட்ச தண்டனையில் இருந்து சதீஷ் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ×