search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய ரிசர்வ் படை"

    காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 100 கம்பெனி துணை ராணுவப்படை அங்கு விரைந்துள்ளது. #Centredeployforces #100companiesforces #JammuKashmir #pulwamaattack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மற்ற பிரிவினைவாத இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க வைக்கும் என அந்த இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்று பேட்டியளித்த காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி மத்திய அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.



    இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டம்  35A-வின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரணை நடத்துகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் கூடுதலாக துணை ராணுவப்படையினரை அனுப்பி வைக்குமாறு மாநில அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள், ஷாஸ்திர சீமா பல் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் என 100 கம்பெனி வீரர்கள் (ஒரு கம்பெனி வீரர்கள் என்பது சுமார் 50 வீரர்கள் கொண்ட குழுவாகும்) காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். #Centredeployforces #100companiesforces  #JammuKashmir #pulwamaattack
    சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். #CRPFjawan #jawanshootsself #ChhattisgarhCRPFjawan
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. 

    இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (20-ந்தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் ராஜிவ் குமார் சிங்(37) என்பவர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தன்னிடம் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்திய ரிசர்வ் படையின் 148-வது படைப்பிரிவில் இடம்பெற்றிருந்த ராஜிவ் குமார் சிங், தலைநகர் ராய்ப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கபிர் நகர் காவல் நிலையத்துக்குள் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    பலியான ராஜிவ் குமார் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலம், சன்டவுலி மாவட்டம், ஜமுனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. #CRPFjawan  #jawanshootsself  #ChhattisgarhCRPFjawan
    பூந்தமல்லியில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பூந்தமல்லி:

    சென்னை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். அதில் ஏராளமான போலீஸ்காரர்கள் அங்கேயே தங்கி உள்ளனர்.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(வயது 40) என்ற போலீஸ்காரரும் அங்கேயே தங்கி உள்ளார். நேற்று காலை அவர் பணிக்கு செல்வதற்காக தான் தங்கி உள்ள கூடாரத்தில் இருந்து சீருடை அணிந்துகொண்டு புறப்பட்டார்.

    பின்னர் பணிக்கு செல்லும்போது அவர் எடுத்துச் செல்ல வேண்டிய துப்பாக்கியை எடுக்க மற்றொரு கூடாரத்துக்குள் சென்றார். திடீரென அந்த கூடாரத்தின் உள்ளே இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீஸ்காரர்கள், அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது ராஜேஷ்குமார், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அவருக்கு அருகில் துப்பாக்கி கிடந்தது. அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த சகபோலீஸ்காரர்கள், உயிருக்கு போராடிய அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    ராஜேஷ்குமார், கடந்த 2001-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்தார். காஷ்மீரில் பணியாற்றி வந்த அவர், கடந்த ஆண்டுதான் பூந்தமல்லிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பணியில் இருந்த ராஜேஷ்குமார், தனது மனைவியிடம் செல்போனில் பேசினார். அப்போது கணவன்-மனைவி இடையே செல்போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    இதை அறிந்த உயர் அதிகாரிகள், பணியின் போது செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறி ராஜேஷ்குமாருக்கு அந்த இடத்திலேயே தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது. மனைவியுடன் தகராறு, செல்போனில் பேசியதற்காக அதிகாரிகள் தண்டனை வழங்கிய சம்பவங்களால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை பணிக்கு செல்ல துப்பாக்கியை எடுக்க வந்தபோது, அதில் அதிக சத்தம் வராமல் இருக்க ‘சைலன்சரை’ பொருத்தி, தனது தாடை பகுதியில் துப்பாக்கியை வைத்து, காலால் அதன் விசையை அழுத்தியதால் குண்டுகள் பாய்ந்து அவர் இறந்து உள்ளார்.

    அந்த துப்பாக்கியால் ஒரு முறை சுட்டால் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் வெளியே வரும். ஆனால் ராஜேஷ்குமார் தான் தற்கொலை செய்துகொள்வதற்காக துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டாவை மட்டும் போட்டு, அதால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவரது தற்கொலைக்கு இவைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வளாகத்திலேயே வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், சிறப்பு தனிச்சிறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 
    ×