search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்நிறுத்தம்"

    • பஸ்நிலைய நிழற்குடைகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் ஒரு சிறிய இடம் மட்டுமே பஸ்சுக்காக காத்திருக்கும் இடமாக மாறி உள்ளன.
    • தேவையான முன்னேற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி 116.1 கிலோமீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீட்டர், சென்னை கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணிமனை வரை26.1 கி.மீட்டர், மாதவரம்- சோழிங்க நல்லூர் வரை 44.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன. சுரங்கம் தோண்டும் பணியும் நடந்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் மெட்ரோ ரெயில் பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் பயணிகளின் தலைக்கு மேல் உள்ள நிழற்கூரை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    ராயப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள பஸ்நிலைய நிழற்குடைகள் அகற்றப் பட்டு சாலையோரத்தில் ஒரு சிறிய இடம் மட்டுமே பஸ்சுக்காக காத்திருக்கும் இடமாக மாறி உள்ளன.

    போரூர் முதல் வடபழனி வரை ஆற்காடு சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சாலை ஆங்காங்கே குறுகிய நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போரூர் தொடங்கி காரம்பாக்கம், லட்சுமி நகர், வளசரவாக்கம், கேசவர்த்தினி, விருகம்பாக்கம், ஆவிச்சி பள்ளி, வடபழனி பஸ் நிலையம் என அடுத்தடுத்து ஆற்காடு சாலையில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் வளசரவாக்கம் மற்றும் ஆழ்வார்திருநகர் ஆகிய இடங்களில் இருந்த பஸ் நிறுத்தம் மெட்ரோ ரெயில் பணிக்காக அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அருகில் தற்காலிக பஸ் நிறுத்தம் என்ற பெயரில் பயணிகள் அமர்வதற்கு கூட வசதி இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பாதுகாப்பு கேள்விக்குறி

    கடந்த மாதம் மழை பெய்த போது பயணிகள் கடும் இன்னல்களை சந்தித்தனர். சாலையோரம் பயணிகள் நிற்கும் இடம் மிகவும் குறுகி உள்ளதால் பஸ்சுக்கு காத்து நிற்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    மேலும் ஆற்காடு சாலையில் உள்ள மற்ற பஸ் நிறுத்தங்களிலும் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்று வதற்கும் பயணிகள் இறங்கி செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே பஸ்நிலைய மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையின் போது அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. தற்போது வெயிலில் தவித்து வருகிறார்கள்.

    புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பு பகுதியில் மெட்ரோ ரெயில் பணிக்காக ஏற்கனவே போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது. அயனாவரத்தில் இருந்து புரசைவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் பால்பர் சாலை வழியாக சுற்றி சென்று வருகின்றன. இதனால் எப்போதும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது கெல்லீஸ் சந்திப்பு பகுதியில் நடுரோட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி ஒருவழிப்பாதையில் வரும் வாகனங்களுக்கு அமைக்கப்பட்ட சாலை குண்டும்,குழியுமாக மாறி உள்ளன. சீரமைக்கப்படாத இந்த சாலையில் வாகனங்கள் செல்லவே தடுமாறி வருகின்றன. மேலும் அங்குள்ள பஸ்நிறுத்தமும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    எனவே மெட்ரோ ரெயில் பணியின் போது போக்குவரத்துக்கும், பஸ் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×