search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நின்ற லாரி"

    • திருச்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது
    • திடீரென லாரியின் முன்பக்க டேஸ் போர்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இந்த வெப்ப தாக்குதலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜ் திடுக்கிட்டு எழுந்து கீழே குதித்து உயிர் தப்பினார்

    திருச்சி:

    திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனைய கட்டுமான பணிக்கு மண் நிரப்பும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் ஏராளமான லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    இதன் அருகிலேயே அரிசி ஆலை பகுதியில் தனியார் ஒருவர் வணிக வளாகம் கட்டுவதற்கு அந்த இடத்தில் மண் போட்டு நிரப்பும் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

    இதில் சேலம் தம்மம்பட்டி கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இருதயசாமி என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி மண் நிரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

    நேற்றைய தினம் வழக்கம்போல் அந்த இடத்தில் தம்மம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பால்ராஜ் (வயது 55) மண்ணை கொட்டி விட்டு அங்குள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தினார். பின்னர் இரவு லாரியிலேயே படுத்து தூங்கினார்.

    இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12.45 மணிக்கு திடீரென லாரியின் முன்பக்க டேஸ் போர்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இந்த வெப்ப தாக்குதலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜ் திடுக்கிட்டு எழுந்தார்.

    பின்னர் லாரியில் இருந்து குதித்து வெளியேறி அங்கிருந்த போர்வெல்லில் மோட்டாரை போட்டு பைப் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து அணைக்க முற்பட்டார்.

    ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பகுதியில் காற்று வேகமாக இருந்த காரணத்தினால் தீ மளமளவென பரவியது. இதற்கிடையே அவர் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த நிலைய அலுவலர் மில்க்யூராஜ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருந்தபோதிலும் லாரியின் கேபின் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. லாரியின் பின்பகுதி டீசல் டேங்க்குடன் தப்பியது. டீசல் டேங்கிலும் தீ பிடித்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.

    தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்தா அல்லது சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×