search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடு முழுவதும்"

    மத்திய அரசின் புதிய கேபிள் கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது என்று கேபிள் டி.வி. பொதுநல சங்கம் அறிவித்துள்ளது. #CableTv #TRAI
    சென்னை :

    இதுகுறித்து தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (டி.சி.ஓ.ஏ.) நிறுவன தலைவர் பி.சகிலன் கூறியதாவது:-

    கேபிள் டி.வி.யில் அனலாக் முறை ஒழிக்கப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது 8-வது புதிய கட்டண கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் விரும்பும் சானல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்கிற அடிப்படையில் கட்டண சானல்கள் தங்கள் கட்டண விகிதத்தை தனித்தனியாக அறிவித்துள்ளன. அதற்கு 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியையும் வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த திட்டம் முழுமையாக கட்டண சானல் ஒளிபரப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் கட்டண சானல் நிறுவனங்களும், கட்டுப்பாட்டறை நிறுவனங்களும் பேசி இசைந்து ஒரு கட்டணத்தை இறுதி செய்து வழங்கி வந்தனர். தமிழகத்தின் முன்னணி கட்டுப்பாட்டறைகளான அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட கட்டண சானல்களை அதிகபட்சம் ரூ.200-க்கு கேபிள் ஆபரேட்டர்கள் வழியாக வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் இதே சானல்களை மக்கள் தேர்வு செய்ய முயன்றால் ரூ.600-க்கும் மேலாக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

    தமிழகத்தில் 1.5 கோடி இணைப்புகள் இருப்பதாக கருதும் நிலையில், தற்போதைய விதிமுறை காரணமாக கோடிக்கணக்கில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரே‌ஷன் செலவிட வேண்டிவரும். ரூ.200-க்கு பார்க்கும் சானல்களை ரூ.600 கொடுத்து பார்க்கும் நிலையை கார்பரேட் கம்பனிகளுக்கு சாதகமாக டிராய் அறிவித்துள்ளதாக கூட்டமைப்பு கருதுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.70-க்கு அதிக சானல்களை வழங்கினார். புதிய திட்டத்தால் பொதுமக்கள் பணம் சுரண்டப்படும் என்பதுடன், ஜெயலலிதாவின் அடிப்படை எண்ணமும் சிதைக்கப்படும் என்று அறிந்து முதல்-அமைச்சர் இதில் தலையிட வேண்டும்.



    100 சானல்கள் வழங்கிய முறை மாறி, தற்போது 500 சானல்கள் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்து கருவிகள் வாங்கப்பட்டு சேவை நடந்துவருகிறது. இந்தநிலையில் திடீரென்று யாரையும் ஆலோசிக்காமல் தவறான முறையில் ரூ.130 என டிராய் அறிவித்து உள்ளது. தூர்தர்சனின் அனைத்து சானல்களையும் கண்டிப்பாக இலவசமாக காட்ட வேண்டும் என்ற விதிமுறையை அறிவித்த டிராய், இந்திய சானல்கள் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.5-க்கு மேல் வைக்கக்கூடாது என கூறியிருந்தால் கட்டண உயர்வு கட்டுக்குள் இருந்திருக்கும். ஜி.எஸ்.டி.யையும் ரத்து செய்ய வேண்டும்.

    பொதுமக்கள் நலன் கருதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், ஒளிபரப்பாளர்கள், கட்டுப்பாட்டறை நிறுவனங்களை அழைத்து பேசி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுவரை மத்திய அரசு இந்த திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் ஆதரவோடு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முழு ஒளிபரப்பு நிறுத்த போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் 29 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் பொதுமக்கள் தொழில் சங்கங்களை இணைத்து பிப் 10-ந்தேதி சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #CableTv #TRAI

    நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோருடன் டெல்லியில் கலந்துரையாடல் நடத்தினார். டேராடூன், கவுகாத்தி மற்றும் ராய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளம் தொழில் அதிபர்கள் இதில் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இன்றைய பெரும் நிறுவனங்கள் அனைத்தும் சிறிய புள்ளியில் தொடங்கியவை தான். எனவே இந்தியர்கள் புதுமையை நோக்கி நடைபோடுவதை தொடர வேண்டும். இல்லாவிட்டால் நாம் தேங்கி விடுவோம்.

    ஒரு காலத்தில் ‘ஸ்டார்ட் அப்’ என்றால் அது டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிற துறைகளிலும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை நாம் பார்க்க முடிகிறது.

    இன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய நகரங்களுடன் நின்று விடுவது இல்லை. மாறாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் கூட துடிப்பான ஸ்டார்ட் அப் மையங்களாக உருவாகி வருகின்றன. அந்தவகையில் உலகளாவிய ஸ்டார்ட் அப் சூழியலை பெற்று இந்தியா புகழ்பெற்று விளங்குகிறது.

    தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக இளையோர் சந்திக்கும் நிதி பற்றாக்குறை பிரச்சினையை அரசும் புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் அதிகமான இளைஞர்கள் இந்த துறையில் சாதிப்பதற்காக ரூ.10 ஆயிரம் கோடிக்கான நிதியை அரசு உருவாக்கி உள்ளது.

    இந்திய இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பை உருவாக்குகின்றனர். அதன் பலனை அவர்கள் பெறுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அரசிடம் விற்க முடியும். அத்துடன் அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகளையும் அரசு எளிமையாக்கி உள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்த 2,500 புதுப்பித்தல் ஆய்வகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகங்கள் இருப்பது போல, இந்த புதுப்பிக்கும் ஆய்வகங்களும் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

    நாங்கள் ஒரு மிகப்பெரிய விவசாய சவாலை உருவாக்கி உள்ளோம். இதில் பங்கேற்று நமது வேளாண் துறையை எப்படி மாற்றுவது? என்று சிந்திக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

    ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கு அத்தியாவசியமான சட்ட உதவிகளை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் குழு ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இப்படி நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 
    ×