search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு ஆய்வாளர்"

    • தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • துப்புரவு அலுவலர் பதவி என்பது துப்புரவு ஆய்வாளரின் பதவி உயர்வு பணியிடமாகும்.

    சென்னை:

    நகராட்சிகளின் பொது சுகாதார பிரிவில் ஒரே பணிகளை செய்வதற்கு வேறு வேறு துறைகளை சேர்ந்த இரு அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து நகராட்சிகளிலும் தற்போது துப்புரவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. இதற்காக மாநில சங்கம் நகராட்சி துறை அமைச்சர், துறை செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறது. இந்த நிலையில் சிறப்புநிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை முயற்சி செய்து வருகிறது.

    இது குறித்து, தங்களது கருத்துகளை, எதிர்ப்பினை தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் மாநில சங்கம் தனது கடிதத்தின் மூலம் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு தெரிவித்து உள்ளது. அக்கடிதத்தில் துப்புரவு அலுவலர் பதவி என்பது துப்புரவு ஆய்வாளரின் பதவி உயர்வு பணியிடமாகும். நோய் தடுப்பு பணி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், உரிமத் தொகை வசூலித்தல், பிறப்பு - இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் பணி அனைத்தையும் துப்புரவு அலுவலர், நகராட்சியின் பொது சுகாதார பிரிவிற்கு தலைமை யேற்று செய்து வருகிறார்.

    இந்நிலையில் துப்புரவு அலுவலர் செய்து வரும் அதே பணிகளை செய்திட பொது சுகாதாரத்துறை, தனது மருத்துவர்களை நகர்நல அலுவலர் என்ற பணியிடத்தில் நகராட்சிகளில் விரைவில் நிரப்பிட உள்ளது. ஒரு நகராட்சியில் ஒரு பணியினை செய்திட வேறு வேறு துறையினை சார்ந்த இரு அலுவலர்கள் எதற்கு என்றும், துப்புரவு ஆய்வாளர்களின் ஒரே ஒரு பதவி உயர்வு துப்புரவு அலுவலர் மட்டுமே. அதையும் நீர்த்து போக செய்யும் விதத்தில், பொது சுகாதாரத்துறை இயக்குனரின் இச்செயல் உள்ளது என்றும், பிறிதொரு துறையான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிலிருந்து நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களில் மருத்துவர்களை நியமித்திடுவதை தவிர்த்திடுமாறும் பொது சுகாதார இயக்குநருக்கு வழங்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து மாநில சங்க தலைவர் கூறுகையில் பொது சுகாதார துறையில் உள்ள மருத்துவ அதிகாரிகள், பதவி உயர்வு பெறும் நோக்கத்தில் நகராட்சிகளில் காலியாக உள்ள நகர்நல அலுவலர் பணியிடங்களுக்கு வருகின்றனர் என்றும், இதனால் ஏற்கனவே அப்பணிகளை செய்து வரும் துப்புரவு அலுவலர்களின் நிலை தான் என்ன, அவர்களுக்குரிய பணி தான் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுகிறது. ஒரே பணி செய்ய இரு அலுவலர்கள் அதுவும் ஒரே நகராட்சியில், தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் தேவை இல்லை. எனவே துப்புரவு அலுவலர் பணியிடம் உள்ள நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடம் தேவை இல்லை என்ற முடிவு உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்சினை குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை இதில் உடனடியாக தகுந்த நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×