search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்களை"

    • மரத்தினால் செய்யப்பட்ட தொட்டில் வாங்கி கட்டினால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • செண்பகவல்லியும், நீலாதேவியும் நல்ல அறிவுடனும், அழகுடனும் வளர்ந்து வந்தனர்.

    சுமார் 500 ஆண்டுகளுக்குமுன்னாள் கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ள பத்மநாதபுரத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவிலில் அர்ச்சகராக ஒருவரை பணியமர்த்தினர். அந்த அர்ச்சகருக்கு நாளடைவில் திருமணமும் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த அர்ச்சகர் தன்னுடைய பெண்குழந்தைக்கு செண்பகவல்லி என்று பெயர் சூட்டினார். அதுமட்டுமில்லாமல் இனி அடுத்து பிறக்கும் குழந்தைக்கு சுவாமியின் பெயரான நீலகண்டன் பெயரை சூட்ட வேண்டும் என்று மனதில் நின்னைத்துக்கொண்டார்.

    அடுத்த வருடமே மீண்டும் ஒரு பெண்குழந்தை அர்ச்சகருக்கு பிறந்தது. பெண்குழந்தை என்பதால் சுவாமியின் பெயரான நீலகண்டன் என்பதை நீலா என்றும், மகள் சக்தியின் ரூபமாக திகழவேண்டும் என்று உணர்ந்த அந்த அர்ச்சகர் தன்னுடை மகளுக்கு நீலாதேவி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    செண்பகவல்லியும், நீலாதேவியும் நல்ல அறிவுடனும், அழகுடனும் வளர்ந்து வந்தனர். மகள்கள் இருவரும் பருவம் அடைந்தனர். அவர்கள் விரும்பும் நகைகள், ஆடைகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வளர்த்து வந்தார் அர்ச்சகர். மகள்களை தனியே வெளியே செல்ல அனுமதிக்காகல் தாய் அல்லது தந்தையுடன் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வளர்த்து வந்தார் அர்ச்சகர்.

    இப்படி இருக்கும் காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாதபுரம் இருந்தது. பதமநாதபுரம் கோட்டைக்கு அருகில் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவிற்கு தனி தளபதியாக இருந்தவர் தான் பத்மநாபன். இவர் சுருள்வாள்வீசுவதில் வல்லவராகவும், சிறந்த வீரராகவும் இருந்தார்.

    பத்மநாபனின் பணி என்னவென்றால் படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது. இந்த பணியைதான் பத்மநாபன் கவனித்து வந்தார். ஒரு நாள் காலையில் புலியூர் குறிச்சியில் இருந்து பத்மநாதபுரம் அரண்மணை நோக்கி குதிரையில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார் பத்மநாபன். அப்போது கோவிலுக்கு சென்றுவிட்டு அக்காவும் தங்கையுமான செண்பகவல்லியும், நீலாதேவியும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    குதிரையில் வந்த பத்மநாபன் அக்கா தங்கையான செண்பகவல்லியையும், நீலாதேவியையும் பார்த்தார். ஆஹா... என்ன அழகு என்று வியந்து பார்த்துவிட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற பத்மநாபன் மறுபடியும் அந்த இரு பெண்களின் மீது ஆசை கொண்டு கோட்டைக்கு செல்லாமல் பெண்களை பின்தொடர்ந்து சென்றார்.

    குதிரையின் சத்தம் அருகில் வரவர அக்காவும் தங்கையும் வேகமாக நடந்து சென்றனர். தங்களுடைய வீட்டிற்கு போய் பயத்தில் திரும்பி பார்த்தனர். அப்போது பத்மநாபன் தெருவின் முனையில் நின்றுகொண்டு கையசைத்துவிட்டு சென்றார்.

    கோட்டைக்கு சென்றதும் பத்மநாபன் நடந்த அனைத்தையும் தன்னுடைய ஆலோசகரிடம் விளக்கி கூறினார். ஆலோசகரிடம் பத்மநாபன் அந்த பெண்கள் இருவரும் யார்? அவர்களது தந்தை யார் என்பதை அறிய வேண்டும் என்று கூறினார். உடனே அந்த ஆலோசகரும் அந்த தெருவில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தார்.

    அந்த இளைஞர், அந்த பெண்கள் இருவரும் அர்ச்சகரின் மகள்கள் என்றும், பெரியவள் பெயர் செண்பகவல்லி, இளையவள் நீலாதேவி என்றும் கூறினார். உடனே பத்மநாபன் மறுநாள் காலை சிவன் கோவில் அர்ச்சகரிடம் மகள்கள் பற்றி பேசலாம் என்று ஆலோசகரிடம் கூறினார்.

    இதை கேட்டதும் பத்மநாபனின் ஆலோசகர் இன்றைக்கு வேண்டாம். அடுத்தவாரம் சிவன் கோவிலில் கொடியேறுகிறது. எனவே அப்போது அங்கு செல்லலாம் என்று கூறினார். இப்படி சில நாட்கள் நகர்ந்தது. பங்குனி தேரோட்டத்துக்கு கொடியேறியதும் கோவில் அர்ச்சகரை பத்மநாபன் தன்னுடைய கோட்டைக்கு அழைத்துள்ளார்.

    கோட்டைக்கு வந்த அர்ச்சகரை அந்த ஆலோசகர் வழிமறித்து உன்னுடைய பெண்களை பத்மநாபன் பார்த்துள்ளார். உன்னுடைய இரு மகள்களையும் அவருக்கு பிடித்துள்ளது. திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார் என்று ஆலோசகர் கூறினார். அதனால் நீங்களே ஒரு நல்ல நாளாக பார்த்து சீக்கிரம் சொல்லுங்கள் என்றார் ஆலோசகர். அதற்கு அர்ச்சகர் பதில் சொல்லாமல் துக்கம் தொண்டையை அடைக்க, கை கால்கள் நடுநடுங்க வீட்டுக்கு வேகமாக நடந்து வந்தார். நடந்ததை பற்றி தன்னுடைய மனைவியிடம் கூறி வருத்தப்பட்டார் அர்ச்சகர்.

    படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பத்மநாபன் நம்முடைய குழந்தைகளை பெண் கேட்கிறான். அவன் குலத்தால் வேறுபட்டவன். திருமணம் செய்துகொடுப்பதற்கு மறுத்தால் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டான். பத்மநாபன் மன்னருக்கு பக்கபலமாக இருப்பவன். என்ன செய்வது என்று தன் மனைவியிடம் ஆதங்கத்துடன் கூறினார் அர்ச்சகர்.

    உடனே அர்ச்சகரின் மனைவி, எல்லாவற்றையும் அம்மையப்பன் பார்த்துக்கொள்வான். இப்போது நீங்கள் உறங்குங்கள் என்று ஆறுதல் கூறினார். இப்படி ஒரு வாரம் சென்றபிறகு, ஆவணி தேரோட்டம் 10-ம் நாள் திருவிழாவிற்கு வந்த சிறப்பு அர்ச்சகர்கள் எல்லோரும் கோவிலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அர்ச்சகர் தனது வீட்டிற்கு வருகிறார். அப்போது அவருடைய மனைவியும், மகள்களும் தேரோட்டத்தை காண கிளம்பிக்கொண்டிருந்தனர்.

    அவர்களை பார்த்ததும் அர்ச்சகர் இப்போது கோவிலுக்கு செல்ல வேண்டாம். மகள்கள் இருவருக்கும் தோஷம் கழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே இன்றைக்கு 6 வகை கூட்டு வச்சி, பாயசம் தயார் செய்து அப்பளத்துடன் சாப்பாட்டை தயார் செய்து வைக்குமாறு கூறினார்.

    இதை பிள்ளைகள் கையினால் 7 பேருக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும் என்றார் அர்ச்சகர். பின்னர் தன்னுடைய இரு மகள்களையும் கோட்டைக்கு அருகில் பாழடைந்த ஆழ்கிணறு ஒன்று உள்ளது. அந்த பாழடைந்த ஆழ்கிணற்றுக்கு இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு சென்றார் அர்ச்சகர்.

    செண்பகவல்லியும், நீலாதேவியும் ஒரேநேரத்தில் கிணற்றில் உள்ள 21 படிகளை தாண்டி இறங்கி காலை கழுவுங்கள் என்று சொன்னார் அர்ச்சகர். உடனே செண்பகவல்லி அப்பா... இந்த பாழடைந்த கிணற்றை காண்பதற்கே பயமாக உள்ளது என்றாள். உடனே நீலாதேவி அது ஒன்றும் இல்லை வா... என்று கூறி அக்காவின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு சென்றார்.

    முதலில் அவர்கள் இருவரும் நடந்து செல்ல அவர்களது பின்னால் நடந்து சென்றார் அர்ச்சகர். கடைசி படிக்கடில் இறங்கி இருபெண்களும் கால்களை கழுவிக்கொண்டு இருக்கும் போது அர்ச்சகர் அவர்கள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு விடுகிறார் அர்ச்சகர். என்ன செய்வதென்று அறியாத இரு பெண்களும் கிணற்றுக்குள் தத்தளித்தனர். உடனே செண்பகவல்லி மூச்சுத்திணறி இறந்துவிடுகிறாள்.

    உடனே நீலாதேவிமட்டும் கிணற்றில் தத்தளித்தபடி ஏன் அப்பா எங்களை இப்படி தள்ளிவிட்டீங்க... பத்மநாபனுக்கு பயந்து எங்களை இப்படி கொல்ல துணிந்துவிட்டீர்களே என்று சொல்லிக்கொண்டே நீலாதேவியும் உயிரை விட்டாள். இருமகள்களை பறிகொடுத்த அர்ச்சகர் வீட்டிற்கு திரும்பினார். அவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அர்ச்சகரின் மனைவியும் கணவனின் மார்பில் சாய்ந்து உயிரைவிட்டாள்.

    இப்படி தன்னுடைய அப்பாவால் உயிரிழந்த அக்காள் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் ஆவியாகி கோட்டையை சுற்றி ஆதாளிபோட்டு வருவோரையும், போவோரையும் அடித்து துன்புறுத்தி வந்தனர். அதுமட்டுமில்லாமல் நீலாதேவி பத்மநாபனை கொன்று அவனது குடலை உறுவி மாலையாக போட்டு சந்தோசமாக ஆரவாரம் செய்து வந்தாள். அதுமட்டுமல்லாமல் பத்மநாபனை சார்ந்தவர்களும், கோட்டையை சுற்றி இருந்த ஊர்மக்களும் நோய்வாய்பட்டு இறந்து வந்தனர். சிலர் அகால மரணம் அடைந்தனர்.

    இதையெல்லாம் அறிந்த மகாராஜா, மலையாள நம்பூதிரிகளை வரவழைத்து சோளிபோட்டு பார்த்தனர். இதற்கெல்லாம் காரணம் அக்காள் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் தான் என்பது தெரியவந்தது. உடனே இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டார் மகாராஜா.

    நல்ல மந்திரவாதியை வைத்து பலிகொடுத்து படையல் பூஜை செய்து அவர்களை சாந்தப்படுத்துங்கள் என்று கூறினார்கள் நம்பூதிரிகள். நம்பூதிரிகள் சொன்னபடியே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பூஜை செய்யலாம் என்று முடிவு செய்தனர். உடனே மகாராஜா மலையாள மந்திரவாதிகள் 3 பேரை வரவழைத்தார். கோட்டைக்கு கிழக்கு பக்கத்தில் மண்ணால் ஆன இரண்டு பெண் உருவத்தை பிடித்து வைத்தனர்.

    அதன்பிறகு அங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டு, ஒருகோட்டை அரிசி பொங்கி ஒரே படையலாக படைத்தனர். இந்த படையல்கள்படைத்த பிறகுதான் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் சாந்தம் அடைந்தனர். காலப்போக்கில் பூஜை நடைபெற்ற இடத்தில் ஒரு கோவிலை கட்டினர். அதுதான் மேலாங்கோட்டில் உள்ள அக்காள் தங்கை கோவில். கோவிலில் வீற்றிருக்கக்கூடிய அக்கா தங்கை இருவரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

    அக்கா செண்பகாதேவி கோவிலில் பலிகள் கிடையாது சைவ படையல் மட்டும் தான் படைக்கப்படுகிறது. தங்கை நீலாதேவி கோவிலில் தான் பலிகள் உண்டு. முதல் பூஜை அக்கா செண்பகாதேவிக்கு தான். பிறகு தங்கை நீலாதேவிக்கு பூஜை செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடைவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதன்பிறகு தங்கை கோவிலான நீலாதேவி என்ற இசக்கி அம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும்.

    ஒருதடவை இந்த திருவிழாவைக்காண திருவிதாங்கூர் மகாராணி வந்தார். கோவிலில் நடைபெறக்கூடிய உயிர்பலியை பார்த்துவிட்டு எதற்கு இப்படி உயிர்பலி கொடுக்குறீர்கள். அடுத்த திருவிழாவிற்கு பலி கொடுக்க கூடாது என்று கட்டளையிட்டு விட்டு சென்றார் மகாராணி.

    அன்று இரவு மகாராணிக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டது நிற்கவே இல்லை. உடனே மகாராஜா நீலாதேவி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்ட மறுநிமிடமே உதிரப்போக்கு நின்றுவிட்டது. அன்று இரவு நீலாதேவி அம்மன் மகாராணியின் கனவில் விரிசடை முடியோடும், வீரப்பல்லோடும் அம்மன் காட்சி கொடுத்தாள். இதை பார்த்ததும் இருகரம் குவித்து வணங்கினார்.

    மறுநாள் காலையில் மகாராஜாவிடம், மகாராணி கனவில் விரிசடை முடியோடும், வீரப்பல்லோடும் நீலாதேவி அம்மன் வந்ததை கூறினார். இவ்வாறு காட்சி கொடுத்தது இசக்கி அம்மன் தான். எனவே அவரை இசக்கி அம்மன் என்று அழையுங்கள் என்று கூறுனார். அன்றுமுதல் நீலாதேவி அம்மனை இசக்கி அம்மன் என்று அழைக்கப்பட்டார்.

    ஒரு தடவை தனது குலதெய்வமான பத்மநாபரையும், குருவாயூரப்பனையும் வணங்கிவிட்டு வந்தார். தனது மனைவிக்கு ஏற்பட்ட கடுமையான உதிரப்போக்கு நின்றதால் தனது காவல் தெய்வமான அக்கா தங்கை கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்கு வந்தனர்.

    மகாராஜா அக்காள், தங்கை கோவிலில் இருவருக்கும் கையில் காப்பும், காலில் தண்டையும் அணிவித்துவிட்டு தன்னுடைய அரண்மனைக்கு புறப்பட்டார். அரண்மனைக்கு வந்த பிறகு அன்று இரவு மன்னனுடைய கனவில் தோன்றிய செண்பகவல்லி அம்மன் தனக்கு மோதிரம் வேண்டும் என்று கேட்டார். உடனே மகாராஜா மறுநாள் மாலை மோதிரத்தை செய்து கொண்டுவந்து அம்மனுக்கு அணிவித்தார்.

    அன்று இரவு அம்மன் கோவிலில் இசைக்கச்சேரி நடந்தது. இசை கச்சேரியை முடித்துக்கொண்டு மகாராஜாவிடம் பரிசுத்தொகையை வாங்கிக்கொண்டு பாடகர் வில்லு வண்டியில் தனது ஊரான குமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அந்த வில்லு வண்டி பத்மநாதபுரம் கிழக்கு பகுதியில் வரும்போது அங்குள்ள சுமைதாங்கி கல்லில் கேரள பெண்கள் போல இருவர் உடை அணிந்து தலையில் அழகிய கொண்டையிட்டு வந்தனர். அந்த இரு பெண்களும் வில்லு வண்டியை நிறுத்தினார்கள். பாடகரை பார்த்து அரண்மனையில தான் பாடுவீங்களா... இங்கேயும் பாடுங்க என்று கேட்டாங்க நீலாதேவி.

    இதை சற்றும் எதிர்பாராத பாடகர் அப்படியே மவுனமாகி நின்றார். ம்... பாடுங்கள் என்று சத்தமாக கத்தினார் நீலாதேவி. பாடகர் பயத்தி நடுநடுங்கி போனார். இதை பார்த்த செண்பகவல்லி, நீலா இங்கே வா... என்று கூறிக்கொண்டு பாடகர் அருகில் சென்றார்.

    நீலாவை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க பாடுங்க அப்டீன்னு சொல்ல அந்த பாடகர் அந்த இருவரையும் போற்றி பாடினார். பாடல் பாடி முடிந்தது செண்பகவல்லி அம்மன் விரலில் கிடந்த அழகிய மோதிரத்தை, அதாவது மன்னர் கொடுத்த அந்த மோதிரத்தை பாடகருக்கு கொடுத்தாள். மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி அம்மன் கையில் கிடந்த மோதிர விரலில் கிடந்த மோதிரம் காணவில்லை என்று உடனே மன்னரிடம் சொன்னார்.

    மன்னர் கோவமுடன் நான் செய்து போட்ட மோதிரம் காணவில்லையா? மோதிரத்தை களவு செய்தவர்களை என்முன் கொண்டுவாருங்கள். அவனை மாறுகால், மாறு கை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். உடனே அரசரின் கட்டளையை முரசுகொட்டி ஆங்காங்க ஊர்மக்களுக்கு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தான் பாடகர் அரண்மனைக்கு வந்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். உடனே மன்னர் என்னுடைய காவல் தெய்வம் உன் முன்னால் வந்தார்களா? நீ பாக்கியவான் தான் என்று சொல்லி பாடகருக்கு மேலும் பல பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    அதுமட்டுமில்லாமல் அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் அந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்ட தொட்டில் வாங்கி இந்த கோவிலில் கட்டினால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

    உண்மையிலேயே தன்னை நம்பி வரும் பக்தர்களை உயர்வாகி வைக்கிறார் மேலாங்கோட்டு அம்மன். இந்த கோவில் எங்க இருக்கு என்று நினைக்கிறீர்களா? நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லக்கூடிய சாலையில் தக்கலைக்கு முன்னால் குமாரகோவில் செல்லக்கூடிய பாதையில் தான் மேலாங்கோட்டு அம்மன் கோவில் அமைந்துள்ளது.  நாமும் அந்த அம்மன் கோவிலுக்கு செல்வோம். வழிபடுவோம்.

    ×