search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரசேகர் ஆசாத்"

    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தலித் தலைவர் சந்திர சேகர் ஆசாத் போட்டியிட முடிவு செய்துள்ளார். #VaranasiConstituency #Modi
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் தலித் இன மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன.

    உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் கை ஓங்கிய போதெல்லாம் இந்த மேற்கு மண்டல பகுதி தலித் இன மக்கள்தான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

    உத்தரபிரதேச மாநில தலித் மக்களின் அடையாளமாக மாயாவதி திகழ்ந்து வரும் நிலையில், சமீப ஆண்டுகளாக சந்திரசேகர் ஆசாத் எனும் இளைஞரும் தலித் மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றுள்ளார். இவர் “பீம் ஆர்மி” எனும் அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் லட்சக்கணக்கான தலித் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த அமைப்பின் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூரில் இருந்து டெல்லிக்கு மோட்டார்சைக்கிள் பேரணி நடத்த பீம்ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் ஏற்பாடு செய்து இருந்தார். கடந்த திங்கட்கிழமை சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் நகரில் இருந்து தலித் இளைஞர்களின் ஊர்வலம் தொடங்கியது. மறுநாள் செவ்வாய்க்கிழமை முசாபர்நகரில் அவர் பிரமாண்ட கூட்டத்தில் பேச இருந்தார்.

    இந்த நிலையில் சந்திரசேகர் ஆசாத் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அனந்த் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பிறகு சந்திரசேகர் ஆசாத்தை மீரட் நகர மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சந்திரசேகர் ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு மண்டல பகுதிகளில் பதட்டம் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று மாலை திடீரென மீரட் நகருக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, ராஜ்பப்பர் ஆகியோரும் உடன் வந்தனர். மீரட் மருத்துவமனைக்கு சென்ற பிரியங்கா அங்கு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை சந்தித்துப் பேசினார்.

    ஆசாத்திடம் உடல் நலம் விசாரித்த பிரியங்கா, நீண்ட நேரம் மருத்துவமனையில் இருந்தார். தலித் மக்களுக்காக போராடி வருவதற்காக ஆசாத்துக்கு பிரியங்கா பாராட்டு தெரிவித்தார். பிறகு மருத்துவமனை வளாகத்தில் பிரியங்கா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தலித்துகள் மீது அராஜகமாக நடந்து கொள்கிறது. தலித் இளைஞர்களின் குரல்கள் கேட்கப்படுவது இல்லை. அவர்களை நசுக்கவே மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டுகின்றன.

    மத்திய அரசால் வேலைவாய்ப்பை உருவாக்க இயலவில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்கள் மீது பாய்கிறார்கள். மத்திய அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்பது தெரியவில்லை.

    தலித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை நான் சந்தித்து பேசியதில் எந்த அரசியலும் இல்லை. அதுபற்றி நான் பேச விரும்பவும் இல்லை.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    இதையடுத்து பீம்ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து இருப்பது உறுதியாகி உள்ளது. பிரியங்காவின் இந்த நடவடிக்கை காரணமாக மாயாவதி பக்கம் இருக்கும் தலித் இளைஞர்கள் வாக்குகளை காங்கிரஸ் பக்கம் திருப்ப முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பீம்ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    வாரணாசி தொகுதியில் நான் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். இந்த தடவை மோடியை வாரணாசியில் வெற்றி பெற நான் விடமாட்டேன்.

    மோடி அரசுக்கு எதிரான எனது போராட்டங்களுக்கு ஆதரவு தருவதாக பிரியங்கா கூறியுள்ளார். எனது உடல் நலம் பற்றியும் அவர் விசாரித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பீம்ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை பிரியங்கா சந்தித்து பேசியதால் உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோடியை எதிர்த்து சந்திரசேகர் ஆசாத் களம் இறங்கினால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    சந்திரசேகர் ஆசாத்தின் நெருங்கிய நண்பர், சகரன் பூரைச் சேர்ந்த இம்ரான் மசூத் ஆவார். சமீபத்தில் இம்ரான்மசூத்தை சந்திரசேகர் சந்தித்து பேசினார்.

    அதன்பிறகே சந்திரசேகர் டெல்லியில் பேரணி நடத்தும் திட்டத்தை அறிவித்தார். எனவே சந்திரசேகர் ஆசாத் தொடங்கிய போராட்டத்துக்கு காங்கிரஸ் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சந்திரசேகர் ஆசாத்தை வாரணாசியில் நிறுத்தி தலித் மக்களின் வாக்குகள் மூலம் மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால்தான் சந்திரசேகர் ஆசாத்தை பிரியங்கா சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. #VaranasiConstituency #Modi
    ×