search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதம் சாதனை"

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்தார். #HarmanpreetKaur #WomenWorldT20 #India
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.



    இதில் கயானாவின் புரோவிடென்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (9 ரன்), நட்சத்திர வீராங்கனை மந்தனா (2 ரன்) இருவரும் சொதப்பினர். அடுத்து வந்த அறிமுக வீராங்கனை ஹேமலதாவும் (15 ரன்) நிலைக்கவில்லை.

    இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் மிரள வைத்தார். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவூட்டினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களில் (45 பந்து, 7 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

    மறுமுனையில் நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்து ரன்மழை பொழிந்த ஹர்மன்பிரீத் கவுர், 49 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயதான ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் (103 ரன், 51 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விக்கெட் கீப்பர் கேட்டியிடம் கேட்ச் ஆனார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. நமது வீராங்கனைகள் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் திரட்டினர். 20 ஓவர் உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.   #HarmanpreetKaur #WomenWorldT20 #India
    ×