search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருவிழாவில் மோதல்"

    • ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
    • தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருமோகூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காலமேக பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக வைகாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது.

    நேற்று மாலை சுவாமி-அம்பாள் சட்டதேரில் பவனி வந்தனர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு மெயின்ரோட்டில் உள்ள கலையரங்கத்தில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அங்கு திரண்டிருந்த இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து அப்புறப்படுத்தினர். ஆனால் இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பினர் வசிக்கும் காலனிக்கு நேற்று நள்ளிரவு கம்பு, கல் போன்ற ஆயுதங்களுடன் கும்பலாக புகுந்தனர்.

    அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் சேதமானது.

    இதனை தடுக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார், செல்வகுமார் உள்பட 3 பேர் மீது அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அவர்கள் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினர்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சீதா ராமன், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மேலும் பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தாக்குதலில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    தாக்குதல் தொடர்பாக 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவில் திருவிழாவில் நடந்த இந்த மோதல் சம்பவம் காரணமாக திருமோகூரில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னை சத்யா நகர் 2-வது தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • பாலாஜி மற்றும் அவரது சகோதரர் பாரத் ஆகியோரின் வீட்டின் அருகில் ராஜா தரப்பினர் மேளம் அடித்தனர்.

    போரூர்:

    சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். கம்யூனிஸ்டு கட்சியின் விருகம்பாக்கம் பகுதி துணை தலைவராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (வயது25).

    அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர்கள் இருவரும் நண்பர்கள். பாலாஜியும், ராஜாவும் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்தனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு பாலாஜி தனது நண்பர்கள் சிலருடன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். அதேநேரத்தில் ராஜா அ.தி.மு.க.விலேயே இருக்கிறார்.

    பாலாஜி தி.மு.க.வுக்கு சென்ற பிறகு அவருக்கும், ராஜாவுக்கும் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அவர்கள் இரு தரப்பினர் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னை சத்யா நகர் 2-வது தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது பாலாஜி மற்றும் அவரது சகோதரர் பாரத் ஆகியோரின் வீட்டின் அருகில் ராஜா தரப்பினர் மேளம் அடித்தனர்.

    அப்போது பாலாஜி மற்றும் ராஜா ஆகிய இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் தலையிட்டு அவர்களை சமரசம் செய்தனர். ஆனாலும் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 11 மணியளவில் மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ராஜாவின் நண்பரான பிரகாஷ் என்பவர் பாலாஜியின் நண்பர் மனைவியிடம் தகராறு செய்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அப்போது அருகில் இருந்த பாலாஜியின் பெற்றோர் இதுகுறித்து தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு முற்றி கைகலப்பு உருவானது.

    இதையடுத்து இரு தரப்பைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு மோதலில் ஈடுபட்டனர். கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இந்த மோதலின் போது பாலாஜி தரப்பினர் திடீரென்று எதிர் கோஷ்டியினர் மீது நாட்டு வெடி குண்டு வீசினர். அது வெடித்து சிதறியதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    வெடிகுண்டு வீசப்பட்டதில் ராஜா தரப்பைச் சேர்ந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மோதல் குறித்து தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர். நகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட என்ஜினீயர் பாலாஜி, கல்லூரி மாணவர் ஜானேஸ்வரன், எலக்ட்ரீசியன் கோபி உள்ளிட்ட 18 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும் ராஜா தரப்பைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக போலீசார், ராஜா உள்பட 20 பேரை தேடி வருகிறார்கள்.

    வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் ஜாபர்கான்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×