search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி தப்பியோட்டம்"

    • மத்திய ஜெயில் நிர்வாகம் சார்பில் மற்றொரு பெட்ரோல் பங்க் அண்மையில் புதிதாக திறக்கப்பட்டது.
    • நேற்றிரவு பணிக்கு வந்த விஜய் ரத்தினம் அதிகாலை பணி முடிய சில மணி நேரங்கள் இருக்கும் முன்பு, அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலியை சேர்ந்தவர் விஜய்ரத்தினம் (வயது42). இவர் மீது பாலியல் புகார் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு போக்சோ வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விஜய் ரத்தினத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை மத்திய ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு, சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டீக்கடை, சலூன் கடை, பெட்ரோல் பங்க் போன்றவற்றில் பணி வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த விஜய் ரத்தினத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு கோவை மத்திய ஜெயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க்கில் பணி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், மத்திய ஜெயில் நிர்வாகம் சார்பில் மற்றொரு பெட்ரோல் பங்க் அண்மையில் புதிதாக திறக்கப்பட்டது. இதையடுத்து விஜய் ரத்தினம் புதிதாக தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க்கில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்தார்.

    நேற்று விஜய் ரத்தினத்திற்கு பெட்ரோல் பங்க்கில் இரவு நேர பணி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து இரவு 7 மணிக்கு சக கைதிகளுடன் அவர் வேலைக்கு புறப்பட்டார். அங்கு கைதிகளுடன் பணியாற்றினார்.

    இன்று காலை விஜய் ரத்தினம் உள்பட அவருடன் பணியாற்றிய அனைத்து கைதிகளும் வேலை முடிந்ததும், ஜெயிலுக்குள் அழைத்து செல்வதற்காக போலீசார் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். அங்கு அனைவரும் வந்து விட்டனரா என சரிபார்த்தனர்.

    அப்போது விஜய் ரத்தினத்தை மட்டும் காணவில்லை. பெட்ரோல் பங்க் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் தேடியும் அவரை காணவில்லை.

    இதையடுத்து போலீசார் அவருடன் பணியாற்றிய சக கைதிகளிடம் விசாரித்தனர். அப்போது, அவர்கள், விஜய் ரத்தினத்தை காலை 5.30 மணியில் இருந்தே நாங்கள் பார்க்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என தெரிவித்தனர்.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேற்றிரவு பணிக்கு வந்த விஜய் ரத்தினம் அதிகாலை பணி முடிய சில மணி நேரங்கள் இருக்கும் முன்பு, அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தப்பியோடிய விஜய் ரத்தினத்தை போலீசார் தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஓவேலி என்பதால் அங்கு சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அங்குள்ள போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×