search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா போலீசார்"

    சென்னையை சேர்ந்த தொழிலதிபரை கேரள போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது, 30 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை மீட்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகாராஜன்(43). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் ரூ.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஜேக்கப் தன்னுடைய சொகுசு காரை மகாராஜனிடம் அடமானம் வைத்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் மகாராஜனிடம் வாங்கிய பணத்தை ஜேக்கப் திருப்பி கொடுத்துள்ளார்.அதன் பிறகும் மகாராஜன் காரை அவருக்கு கொடுக் காமல் ஏமாற்றியதாக கூறப் படுகிறது. இதுகுறித்து ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் எர்ணாகுளத்தில் இருந்து ஒரு சப்-இன்ஸ் பெக்டர், 3 காவலர்கள் அடங்கிய தனிப்படை நேற்று மாலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் மகாராஜனை கேரளாவுக்கு ஒரு காரில் அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் கேரள போலீசார் வந்த கார் கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சோதனைச் சாவடி அருகே இரவு 11 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்கு தயாராக இருந்த சுமார் 30 பேர் கொண்ட கும்பல் கேரள போலீசார் வந்த காரை சுற்றி வளைத்தனர். பின்னர் காரில் இருந்த போலீசாரை தாக்கியதோடு, ஆயுதங்களை காட்டி மிரட்டினர். அதன் பின்னர் காரில் இருந்த மகாராஜனை மீட்டு கார்களில் தப்பிச் சென்று விட்டனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கேரள போலீசார், உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினர். இதைத் தொடர்ந்து பாலக்காடு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான கேரள போலீஸ் குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    இன்று அதிகாலை இது குறித்து கோவை கருமத்தம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தினர்.

    கடத்தல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் கணியூர் சோதனை சாவடி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.ஆனால், அதில் கும்பல் காரில் வந்து கடத்தி சென்றதற்கான அடையாளங்கள் இல்லை.

    இது போலீசாருக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. மகாராஜனை வேறு எங்கேயாவது விட்டு, விட்டு இங்கு வந்து புகார் கொடுக்கிறார்களா? உண்மையிலேயே கும்பல் மகாராஜனை கடத்தி சென்றிருந்தால் எந்த பாதையில் சென்றிருப்பார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×