search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் வெளிமாநிலத்தவர் தாக்குதல்"

    குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறும் நிலைக்கு பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டி மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். #Gujaratattacks
    கொல்கத்தா:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரவிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ்சிங் குஷ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஒருவர் செய்த தவறுக்கு குஜராத்தி அல்லாத அனைவரையும் குற்றவாளிகளாக கருதி தாக்குதல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்துருந்தார்.

    எனினும், இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த பலர் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறியதற்காக குஜராத் மாநில பா.ஜ.க. அரசுக்கு
    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ‘‘இந்த தாக்குதலின் பின்னணியில் சிலரது தூண்டுதல் இருந்துள்ளது. அதனால்தான் மக்கள் அச்சத்தில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் அபாயகரமான முன்மாதிரியாகி வருகிறது. மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய இந்த பிரச்சனை பேரழிவுக்கான பாதையாக மாறிவிட கூடாது. இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தவறியது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை.

    அந்த மக்கள் பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். குஜராத்தை தங்களது சொந்த மாநிலமாக கருதிவந்த அவர்கள் எல்லாம்  இப்போது பீதி அடைந்துள்ளனர். இது எனக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது’’ என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல், குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் தாக்குதலுக்கு இலக்காகிவரும் நிலைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘‘குஜராத்தில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளால் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் மக்கள் மிகுந்த வேதனையும், ஆத்திரமும் அடைந்துள்ளனர். இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். #Gujaratattacks #Gujaratmigrantworkers #Mamata #Attackonmigrantworkers #Gujaratmigrantlabourers
    ×