search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர் விவகாரம்"

    • தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • உரிய தண்ணீரை திறந்து விடக்கோரியும், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என விவசாயிகள் நம்பி இருந்தனர்.

    ஆனால் அணை திறக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் தமிழகத்திற்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரையும் கர்நாடக அரசு திறந்து விடவில்லை. மிக குறைந்த அளவே தண்ணீரை திறந்து விட்டது. இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரும் வரவில்லை. கர்நாடக அரசின் இந்த வஞ்சிக்கும் செயலால் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காயத் தொடங்கின.

    தமிழக அரசும் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற பல கட்டங்களாக கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால் அப்படியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விடவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை உச்சத்திற்கு சென்றனர்.

    உரிய தண்ணீரை திறந்து விடக்கோரியும், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் மணிமொழியன், துரை. ரமேசு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹீமாயூன் கபீர், மணி செந்தில், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன் , தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் தலைவர் கார்த்திகேயன், மனிதநேய ஜனநாயக கட்சி அகமது கபீர், தமிழர் தேசிய களம் தலைவர் கலைச்செல்வம், ஆழ்துளைக் கிணற்று பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்க, விவசாய சங்க நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். செயல்படாத காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரை நீக்கி நடுநிலை உள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும். குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்களை காக்க உடனடியாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடகத்திற்கு ஆய்வு குழு அனுப்பி காவிரி நீர் தேக்கங்களில் உள்ள நீரின் அளவு, மழை பொழிவு அளவு ஆகியவற்றின் உண்மை நிலையை அறிந்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் காவிரி உரிமை மீட்பு குழு செந்தில் வேலன், தனசேகரன், தமிழ் தேசிய பேரியக்கம் பழ. ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கம், விவசாய சங்க நிர்வாகிகள், டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×