search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமிஷனர் அலுவலகம்"

    சாலையோர கடைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கடைகளை உடைத்துள்ளது குறித்து வியாபாரிகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுடன் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எம். குமார் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    சோழிங்கநல்லூர் முதல் மேடவாக்கம் செல்லும் மெயின் ரோட்டில் நடைபாதையில், மாற்று திறனாளிகள், விதவைகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கடைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், வியாபாரிகளுக்கு மாநகராட்சி அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்மஞ்சேரி போலீசாரின் உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், தனிநபர் ஒருவரும் சேர்ந்து கடைகளை புல்டோசர் மூலம் அடித்து உடைத்துள்ளனர்.

    இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாற்றுதிறனாளிகள் கடை வைப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்துள்ளதாக அதிமுக எம்எல்ஏ சத்தியா மீது கோவிந்தராஜ் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை வடபழனி சோமசுந்தர பாரதிநகர் சங்கம் சாலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் டேபிள், சேர், பாத்திரம், சாமியானா பந்தல் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறேன். கடையின் மேல்தளத்தை அதிமுக வத்தலக்குண்டு ஆறுமுகம் நினைவு மன்றத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.

    தீபாவளி பண்டிகை செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்தியா கூறியதாக அவரது ஆட்கள் புதூர் உதவியா, கோகுல் என்கிற கோகுல கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னிடம் கேட்டனர். நான் தற்போது பணம் இல்லை. பிறகு தருகிறேன் என்றேன்.

    அவர்கள் பணம் தரவில்லை என்றால் உனது கடையை எங்கள் கட்சி அலுவலகமாக மாற்றி விடுவோம் என்று மிரட்டினார்கள். பாலசுப்பிரமணியன் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி எனது கடையை பூட்டி பொருட்களை அடித்து நொறுக்கினார். அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    கடந்த 4-ந்தேதி நான் வெளியூர் சென்றிருந்தபோது சத்தியா எம்எல்ஏ கூறியதாக கோகுல், பாலசுப்பிரமணியன், புதூர் உதயா ஆகியோர் எனது கடையை உடைத்து பொருட்களை வெளியே எடுத்து போட்டு ரூ.76 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றனர். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி சத்தியா எம்எல்ஏ, கோகுல், பாலசுப்பிரமணி, புதூர் உதயா ஆகியோர் வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து என்னிடம் வந்து வழக்கை வாபஸ் வாங்கு மாறும் இல்லாவிட்டால் என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளித்து என் கடையை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து பலியான நகை வியாபாரியிடம் தங்க கட்டிகளை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    திருச்சி சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 68). நகை வியாபாரியான இவர் திருச்சியில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்துள்ளார். இவர் வாரந்தோறும் வியாழக்கிழமை திருச்சியில் இருந்து ரெயிலில் சென்னை எழும்பூர் வருவார்.

    எழும்பூர் ரெயில் நிலைய வாகனம் நிறுத்துமிடத்தில் அவரது ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருக்கும். ரெயிலை விட்டு இறங்கியவுடன் தனது ஸ்கூட்டரில் ஏறி சவுகார்பேட்டைக்குச் செல்வார். தனது நகைப்பட்டறையில் செய்த தங்க நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வார்.

    அந்த நகைகளுக்கு பதிலாக தங்க கட்டிகளையோ அல்லது ரொக்கப்பணமாகவோ வாங்கிக் கொள்வார். வழக்கம்போல கடந்த மாதம் 24-ந் தேதி அன்று ரெங்கராஜன் சென்னை வந்தார். தான் கொண்டுவந்த நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடைகளுக்கு சப்ளை செய்தார்.

    25-ந் தேதி அன்று இரவு அவர் மீண்டும் திருச்சி புறப்பட்டார். எழும்பூரில் ரெயில் ஏறுவதற்காக தனது ஸ்கூட்டரில் சவுகார்பேட்டையில் இருந்து ரெங்கராஜன் வந்து கொண்டிருந்தார். அன்றைய தினம் இரவு 10.30 மணி அளவில் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே. சம்பத் சாலையில் வந்தார்.

    அப்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறும்போது, அவரது ஸ்கூட்டர் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. ரெங்கராஜனும் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே ரெங்கராஜன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்தநிலையில் ரெங்கராஜன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் வைத்திருந்த ½ கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சில மர்மநபர்கள் கொள்ளையடித்ததாகவும், அந்த மர்ம நபர்களை ரெங்கராஜன் விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் அல்லது தங்க கட்டிகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், ரெங்கராஜனின் உறவினர்கள் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

    கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் வேப்பேரி உதவி கமிஷனர் சார்லஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வீரக்குமார், சித்தார்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    ரெங்கராஜன் சவுகார்பேட்டையில் இருந்து புறப்பட்டபோது, அவருடன் மகேந்தர் என்ற வாலிபர் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். மகேந்தர் சவுகார்பேட்டை நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்தவர் ஆவார். சூளை பகுதியில் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கிவிட்டார்.

    அதன்பிறகு ரெங்கராஜன் மட்டும் தனியாக ஸ்கூட்டரில் வந்துள்ளார். சூளை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். வாலிபர் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கியபிறகு ரெங்கராஜனை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்துள்ளனர்.

    வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்சியிலும் அதே 4 பேரும் ரெங்கராஜன் வந்த ஸ்கூட்டரை பின்தொடர்ந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட 4 பேர் மீதும், வாலிபர் மகேந்தர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மகேந்தரை பிடித்து விசாரித்தார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்களை மகேந்தர் வெளியிட்டார்.

    ரெங்கராஜனை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கொள்ளை ஆசாமிகள் என்று தெரியவந்தது. வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் மகாவீர் காலனி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ஆசாமிகளும் ரெங்கராஜனை வழிமறித்து தாக்கி உள்ளனர்.

    அவர் வைத்திருந்த ½ கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை ரெங்கராஜன் தனது ஸ்கூட்டரில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் வேகத்தடையில் சிக்கி நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து ரெங்கராஜன் பலியாகியிருக்கிறார்.

    இந்த கொள்ளை திட்டத்திற்கு மூளையாக வாலிபர் மகேந்தர்தான் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. ரெங்கராஜன் தங்க கட்டிகள் கொண்டு செல்லும் தகவலை அவர்தான் கொள்ளை கும்பலுக்கு தெரிவித்துள்ளார். இதனால் முதலில் வாலிபர் மகேந்தரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்தவர். அவர் சொன்ன தகவலின்பேரில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மம்முட்டியான் என்ற ராஜ்குமார் (32), சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முகமது சித்திக் (28), ஆனந்த் (28) ஆகியோரையும் வேப்பேரி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் இம்ரான், நூரு, பீட்டர், ‘ஸ்பென்சர்’ ரகுமான் ஆகிய மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இம்ரான்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவர்தான் கொள்ளை திட்டத்தை வகுத்துக்கொடுத்து கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தங்க கட்டிகள் இம்ரானிடம் இருப்பதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த தங்க கட்டிகளை தன்னிடம் வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக ரொக்கப்பணமாக எங்களுக்கு கூலியாக கொடுத்தார் என்று இம்ரானை பற்றி கைதானவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் இம்ரான் உள்பட மேலும் 4 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×