search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிர்காப்பு கவசம்"

    • தற்போது கோடை விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இதனை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடியே 25 லட்சம் செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. இந்த அதிநவீன படகுகளை கடலில் உல்லாச சுற்றுப்பயணம் செய்ய இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் யாரும் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்து படகில் பயணம் செய்வதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    எனவே வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்து செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×