search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர் கொலை"

    • குர்விந்தர் கடந்த 2021-ல் கனடா சென்றுள்ளார்
    • உணவு வினியோகம் செய்து வந்த நிலையில், காருடன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்

    கனடாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். படிப்பதற்காகவும், படித்து முடித்தபின் அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்காகவும் அங்கு செல்லும் பஞ்சாப் மாநில இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்.

    இதே நோக்கத்துடன் 2021-ம் வருடம் ஜூலை மாதம் கனடா வந்தவர், இந்தியாவை சேர்ந்த குர்விந்தர் நாத் (24). இவர் உணவு வினியோக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    கனடாவின் டோரோண்டோ நகருக்கருகே ஓன்டேரியோ ஏரி கரை பகுதியில் அமைந்துள்ள நகரம் மிஸிஸாகா.

    ஜூலை 9-ம் தேதி நாத், மிஸிஸாகா பகுதியின் பிரிட்டானியா மற்றும் கிரெடிட்வியூ சாலைகளுக்கருகே அடையாளம் தெரியாத நபர்களால் குர்விந்தர் கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து கனடாவின் காவல்துறை தெரிவித்திருப்பதாவது:-

    இச்சம்பவத்தில் பலர் சம்பந்தபட்டிருக்கலாம் என தோன்றுகிறது. தாக்கியவர்கள் உணவுக்கான ஆர்டர் கொடுத்துள்ளனர். வழக்கமான ஆர்டர் போல் நினைத்து அதனை வழங்க நாத் வாகனத்தில் சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்தவுடன் அவரின் வாகனத்தை திருட முயற்சித்திருக்கின்றனர். அப்போது நடந்த போராட்டத்தில் அவரை பலமாக தாக்கியுள்ளனர். பிறகு அவரை அங்கேயே போட்டு விட்டு வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.

    சம்பவத்தை கண்ட பொதுமக்களின் உதவியால், அருகிலுள்ள அவசர கால சிகிச்சை மையத்தில்  குர்விந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி, ஜூலை 14-ம்தேதி உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் அருகே, ஓல்ட் கிரெடிட்வியூ மற்றும் ஓல்ட் டெர்ரி ரோடு அருகே திருடப்பட்ட அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.

    குர்விந்தர் படுகாயம் அடைந்ததால், அவரை தாக்கியவர்கள் பதட்டத்தில் வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். தடயவியல் நிபுணர்கள் வாகனத்தை பரிசோதித்து வருகின்றனர்.

    இவ்வாறு காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    கனடா நாட்டிற்கான இந்திய தூதரக அலுவலக அதிகாரி சித்தார்தா நாத் கூறும்போது "இது ஒரு இதயத்தை கலங்க செய்யும் சோக நிகழ்ச்சி. அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்தார்.

    இந்திய தூதரக அலுவலகத்தின் உதவியுடன் குர்விந்தரின் உடல் வருகிற 27-ம் தேதி இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.

    உலகின் அமைதியான நாடுகளில் ஒன்று என கருதப்பட்டு வந்த கனடாவில் இத்தகைய ஒரு துணிகர சம்பவம் நடைபெற்றிருப்பது உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    ×