search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வீராங்கனை"

    ஆசிய தடகள போட்டியில் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்தினார். #AsianAthleticsChampionship #PUChitra #GoldMedal
    தோகா:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.

    கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.


    தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்யராஜீவ் (வலமிருந்து 2-வது) உள்பட இந்திய அணியினர்.


    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.

    பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஆரோக்ய ராஜீவ் மேலும் பல சாதனைகளை படைத்திட வேண்டும் என்று வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.  #AsianAthleticsChampionship #PUChitra #GoldMedal
    உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் காயம் காரணமாக பாதியில் விலகினார். #DipaKarmakar #GymnasticsWorldCup
    பாகு:

    ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை போட்டி அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் தனது சாகசத்தை வெளிக்காட்டி அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் ‘வால்ட்’ பிரிவின் தகுதி சுற்றில் 3-வது இடத்தை பிடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.

    இதன் இறுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தனது முதல் வாய்ப்பில் சரியாக தரையிறங்கவில்லை. இதனால் அவருக்கு முழங்காலில் காயம் அதிகரித்தது. எனவே அவர் தனது 2-வது முயற்சியில் ஈடுபடாமலேயே போட்டியில் இருந்து விலகினார்.

    காலில் காயம் அடைந்த மணிப்பூரை சேர்ந்த 25 வயதான தீபா கர்மாகர் அடுத்த வாரம் தோகாவில் நடைபெறும் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இருந்தும் விலகி உள்ளார். 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தீபா கர்மாகர் இந்த போட்டியின் மூலம் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது காயத்தால் அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

    காயம் அடைந்த தீபா கர்மாகர் உடனடியாக நாடு திரும்பி சிகிச்சை பெற இருக்கிறார். அத்துடன் மங்கோலியாவில் ஜூன் மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஜெர்மனியில் அக்டோபர் மாதம் நடக்கும் உலக சாம்பியஷிப் போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் அவர் முனைப்பு காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தை பிடித்து அசத்திய தீபா கர்மாகர் அதன் பிறகு காயத்தில் இருந்து மீண்டு வர சுமார் 2 வருடம் பிடித்தது நினைவிருக்கலாம்.

    தீபா கர்மாகர் காயம் குறித்து இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் பெடரேஷன் துணைத்தலைவர் ரியாஸ் பாத் அளித்த பேட்டியில், ‘இறுதிப்போட்டிக்கு முன்பாக தீபா கர்மாகருக்கு முழங்காலில் சில பிரச்சினை ஏற்பட்டு வலி உருவானது. பிசியோதெரபிஸ்ட் சிகிச்சைக்கு பிறகு வலியின் தாக்கம் குறைந்தது. அவர் ‘வால்ட்’ முதல் முயற்சியில் சரியாக தரையில் குதிக்கவில்லை. இதனால் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட வலி அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அடுத்த வாய்ப்பை அவர் முயற்சி செய்யாமலேயே போட்டியில் இருந்து விலக நேர்ந்தது. இந்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டாலே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்’ என்று தெரிவித்தார்.  #DipaKarmakar #GymnasticsWorldCup
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார். #ISSFWorldCup #ApurviChandela
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது.



    இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர். #ISSFWorldCup #ApurviChandela
    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். #WomensWorldBoxing #Championship #India
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ பிரிவில் நேற்று நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லாத்தெர், மொராக்கோ வீராங்கனை டோஜானி டோயாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சோனியா லாத்தெர் 5-0 என்ற கணக்கில் டோஜானி டோயாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அரியானாவை சேர்ந்த 26 வயதான சோனியா லாத்தெர் 2016-ம் ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை வெள்ளிப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் 51 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 4-1 என்ற கணக்கில் அர்மேனியா வீராங்கனை அனுஷ் கிரிகோர்யானை சாய்த்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 64 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமெலி மூரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கம் வென்றனர். #YouthOlympics2018 #ManuBhaker
    பியூனஸ் அயர்ஸ்:

    206 நாடுகள் பங்கேற்றுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 62 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா மொத்தம் 274 கிலோ (ஸ்னாட்ச்-124, கிளன் அண்ட் ஜெர்க்-150 கிலோ) எடை தூக்கி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். துருக்கி வீரர் தோப்தாஸ் கானெர் மொத்தம் 263 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும், கொலம்பியா வீரர் வில்லார் எஸ்டீவன் ஜோஸ் மொத்தம் 260 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.



    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். மிசோரமை சேர்ந்த 15 வயதான ஜெர்மி லால்ரினுங்கா உலக இளையோர் மற்றும் ஆசிய இளையோர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லால்ரினுங்கா கூறுகையில், ‘இளையோர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தை குத்துச்சண்டையில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர். அதனால் நானும் குத்துச்சண்டை வீரராக ஆக வேண்டும் என்று விரும்பி, ஆரம்ப காலத்தில் அதற்குரிய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தேன். அந்த சமயத்தில் தான் எங்களது கிராமத்தில் புதிதாக பளுதூக்குதல் அகாடமி திறக்கப்பட்டது. அதை பார்த்ததும் எனக்குள் பளுதூக்குதல் வீரராக உருவெடுக்க வேண்டும் என்று ஆசை துளிர்விட்டது. அதன் பிறகு பளுதூக்குதலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த போட்டிக்கு உடல்ரீதியாக நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் தான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.



    மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த மே மாதம் அம்மை நோயால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து குணமடைந்ததும், பழைய நிலையை எட்ட கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இனி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இன்னும் தீவிரமாக தயாராகுவேன். ஒலிம்பிக் போட்டிக்கு எனது உடல் எடைப்பிரிவை 67 கிலோவுக்கு மாற்றப்போகிறேன்’ என்றார்.

    இதன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனை மானு பாகெர் 236.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ரஷிய வீராங்கனை இயானா எனினா 235.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜார்ஜியா வீராங்கனை நினோ குட்சிபெரிட்ஸ் (214.6 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    அரியானாவை சேர்ந்த 16 வயதான மானு பாகெர் உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் அவர் பதக்கமின்றி ஏமாற்றம் அளித்தார். அதற்கு இந்த போட்டியில் மானு பாகெர் பரிகாரம் தேடிக் கொண்டார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    மானு பாகெர் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆசிய போட்டி ஏமாற்றத்திற்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி எனது மனஉறுதிக்கு வலுசேர்க்கும். ஒவ்வொரு முறையும் முழுதிறமையை வெளிப்படுத்தவே முயற்சிக்கிறேன். சில நேரம் வெற்றிகரமாக அமையாமல் போகலாம். ஆனால் விடா முயற்சியை சிறந்த முறையில் தொடர்வதும், அதிக புள்ளிகள் குவிப்பதும் திருப்தி அளிக்கிறது’ என்றார்.

    ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் தோற்கடித்தது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.  #YouthOlympics2018 #ManuBhaker
    அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். #TababiDeviThangjam
    பியூனஸ் அயர்ஸ்:

    3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 44 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி 0-11 என்ற புள்ளி கணக்கில் வெனிசுலா வீராங்கனை மரியா கிமின்சிடம் தோல்வி கண்டார். இதனால் தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

    வெள்ளிப்பதக்கம் வென்ற தங்ஜம் தபாபி தேவி மணிப்பூரை சேர்ந்தவர். ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பந்தயத்தில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் துஷர் மானே 247.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ரஷிய வீரர் கிரிகோரி ஷமாகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், செர்பியா வீரர் அலெக்சா மிட்ரோவிச் 227.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.  #TababiDeviThangjam
    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார். #Tejaswini #Gold #MunichWorldCup
    புதுடெல்லி:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் 621.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மயிரிழையில் பின்தங்கிய சக வீராங்கனை அஞ்ஜூம் மோட்ஜில் 621.2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ்வினி சவாந்த் சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் செயின்சிங் 627.9 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்ற இந்தியர்கள் ககன் நரங், சஞ்ஜீவ் ராஜ்புத் ஏமாற்றம் அளித்தனர்.  #Tejaswini #Gold #MunichWorldCup
    ×