search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எஸ்.பி. வேலுமணி"

    மதுரையில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். #MaduraiMultilevelParking
    சென்னை:

    மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பழைய சென்ட்ரல் மார்கெட் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பது விவாதிக்க வேண்டும் என சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

    இந்த  தீர்மானத்தின் மீது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட, பழைய சென்ட்ரல் மார்கெட், மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டதன் காரணமாக, தற்போது நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.  

    தற்போது பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் காலியாக உள்ள இடத்தில், அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள்,  தங்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, 24 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த பன்னடக்கு வாகன நிறுத்துமிடத்தின் முதல் அடித்தளம் 6,394 சதுர மீட்டர் பரப்பிலும்,  2ம் அடித்தளம் 6,394 சதுர மீட்டர் பரப்பிலும், ஆக மொத்தம் 12,788 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது.

    இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தில், 118 நான்கு சக்கர வாகனங்களும்,  1,601  இரு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு ஏதுவாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

    இத் திட்டத்திற்கு, 13.6.2018 அன்று நடைபெற்ற மாநில அளவிலான உயர்மட்ட வழிகாட்டுக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, செயலாக்கம் பெற அரசின் பரிசீலனையில் உள்ளது.  

    இத்திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல் சீர்மிகு  நகரத் திட்டத்தின் கீழ், பெரு நகர சென்னை மாநகராட்சி உட்பட 9 மாநகராட்சிப் பகுதிகளில்,  மொத்தம்,  335.41 கோடி மதிப்பீட்டில், 14 பன்னடக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி,  தியாகராய நகரில் உள்ள, தியாகராயா சாலையில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 36 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் 2.2.2018 அன்று துவங்கப்பட்டு, துரிதமாக  நடைபெற்று வருகின்றன.

    இந்த பல அடுக்கு வாகன நிறுத்தம், 2 கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் என மொத்தம் 9 தளங்கள் 8808 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட கட்டடமாக அமைக்கப்படுகிறது.          

    2 கீழ் தளத்தில் தோராயமாக 550 இரு சக்கர வாகனமும், தரைத்தளம் மற்றும் 6 மேல்தளத்தில் 250 நான்கு சக்கர வாகனமும் நிறுத்தும் வகையில் அமைக்கப்படும். 

     இது முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் செயல்படுத்தப்படும். இத்திட்டம், பேரிடர்களை சமாளிக்கும் வகையில், நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தற்போது ஆழ்துளை கடைக்கால் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஜனவரி, 2020-க்குள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MaduraiMultilevelParking
    ×