search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Word hindu"

    ‘இந்து’ என்ற சொல் மாற்றான் கொடுத்தது என கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கமல்ஹாசனை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.



    இந்த பரபரப்புக்கு இடையே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது கமல்ஹாசனை நோக்கி, செருப்பு, கல், முட்டை வீசப்பட்டது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கமல்ஹாசன் சூலூரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில் ‘பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்துக்கு நன்றி. இதோ என்னுடைய பரப்புரை காண...’ என்று தலைப்பிட்டு தனது டுவிட்டர் பதிவில், 3 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார்.

    அதில் ஆக்ரோஷமாக பேசிய கமல்ஹாசன், நிறைவாக ‘மாற்ற வேண்டியவர்களை மாற்றி விட்டால், இந்த நாடே மாறிவிடும்’ என்று கூறுகிறார்.

    இதனிடையே தன் மீதான சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கமல்ஹாசன் டுவிட்டரில் நேற்று மாலை மீண்டும் ஒரு பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறது மத்திய-மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களோ, நாயன்மார்களே, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.

    முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை.

    நாம் ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாக பிழையான தேர்வாகும்.

    ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கிறோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! ‘தமிழா’ நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.



    ×