search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "will remonetise"

    காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம், பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தார். #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். இதன்மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என சமீபத்தில் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

    இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு காணப்படுகிறது. அதேநேரம் இந்த திட்டம் சாத்தியமில்லை என பொருளாதார வல்லுனர்களில் ஒரு சாராரும், சாத்தியமானதுதான் என மற்றொரு பிரிவினரும் கூறி வருகின்றனர்.

    இவ்வாறு நியாய் திட்டம் நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பி இருக்கும் நிலையில், இந்த திட்டம் குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ராகுல் காந்தி நேற்று விரிவான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் தற்போதுகூட 20 முதல் 22 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்கம் மற்றும் கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) திட்டங்களாலேயே இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் ஏராளம்.

    எங்களது நோக்கமே இந்தியாவில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதுதான். அதற்காகவே இந்த நியாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. வறுமைக்கு எதிரான கடைசி தாக்குதலே இந்த திட்டம் ஆகும்.

    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் செய்தது எல்லாம், பணமதிப்பு நீக்கம் மற்றும் கப்பார் சிங் வரியால் இந்திய பொருளாதாரத்தில் இருந்து அனைத்து பணத்தையும் அகற்றியதுதான். அமைப்புசாரா துறைகள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

    எங்கள் நியாய் திட்டத்தின் நோக்கம் 2 பிரிவானது. முதலில் இது 20 சதவீத பரம ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்கிறது. அடுத்ததாக பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்தும்.

    இந்த திட்டத்தின் பெயருக்கு (நியாய்) இந்தியில் ‘நீதி’ என்ற பொருள் உண்டு. கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்ட பிரதமர் மோடி, அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே அவர்களுக்கான நீதியாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தால் நாட்டின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என சில பொருளாதார வல்லுனர்கள் கூறுவது தவறு. இது தொடர்பாக ஏராளமான பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுனர்களிடம் விரிவாக ஆலோசித்த பின்னரே இதை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்தோம்.

    இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் அவசரம் காட்டமாட்டோம். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. போல நிபுணர்களிடம் ஆலோசிக்காமல் இந்த திட்டத்தை அமல்படுத்தமாட்டோம். இந்த திட்டம் குறித்து விரிவாக சோதித்து, ஆலோசித்து இருக்கிறோம். அந்தவகையில் நியாய் திட்டம் முற்றிலும் சாத்தியமான திட்டமே.

    இந்த திட்டம் முதலில் சோதனை ரீதியாக அமல்படுத்தி, பின்னர் அதில் ஏதாவது குறைகள் இருந்தால் அவற்றை களைந்துவிட்டு தேசிய அளவில் செயல்படுத்துவோம். மேலும் இதற்கான பயனாளர்களை கண்டறிவதிலும் வலுவான வழிமுறையை பின்பற்றுவோம். பயனாளர்கள் யாரையும் விடமாட்டோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
    ×