என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wailing movements"

    • இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார்
    • வார்லி கலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதே குறிக்கோள் என பேட்டி

    நீலாம்பூர்,

    சூலூரில் ஒயிலாட்ட நடன கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் அதன் அசைவுகளை வார்லி என்ற வரைபட பெயிண்டிங் மூலம் வரைந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கோவை பெண்ணின் முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஊத்துப்பாளையம் பகு தியை சேர்ந்தவர் தேவராஜ். விவசாயி. இவரது மனைவி ரம்யா.

    ஒயிலாட்டம் ஆடுவதில் ஆர்வம் கொண்ட ரம்யா கடந்த 2019-ம் ஆண்டில் ஒயிலாட்டக் கலையை கனகராஜ் என்ற ஒயிலாட்ட ஆசிரியரிடம் கற்றுக்கொண்டார்.

    சங்கமம் கலைக்குழு என்ற ஒயிலாட்டக் குழுவை மீட்டெடுத்து, ஒயிலாட்ட ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

    ஒயிலாட்டக் கலைகளை ஒயிலாட்ட ஆசிரியர் கனகராஜ் உடன் சேர்ந்து குழுவாக வெளி நாடுகளிலும் பரப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையிலும், அவர்களும் அதனைக் கற்றுக் கொள்ளும் முறைகள் குறித்தும், நடன வடிவங்கள் குறித்தும் ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்த வேண்டும் என ரம்யாவுக்கு ஆசை ஏற்பட்டது.

    இதனை அடுத்து ஒயிலாட்ட நடன அசைவுகளை வார்லி என்ற ஓவிய முறை வாயிலாக ஓவியமாக வரைந்து உள்ளார். 3 பகுதிகளாக 64 பக்கங்களில் வடிவ முறைகள் மற்றும் அசைவு முறைகளை வரைந்து உள்ளார்.

    பின்னர் இந்த அசைவுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் என்ற சாதனை புத்தக அமைப்பிற்கு அனுப்பி வைத்தார்.ரம்யாவின் இந்த முயற்சியை வரவேற்ற இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரப்படுத்தியது.

    இது இப்பகுதி கிராம மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இந்த கலையை கற்று வருகிறோம். நாங்கள் மலேசியாவுக்கு நிகழ்ச்சிக்காக சென்றபோது அங்கிருந்த மக்கள் எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

    அவர்கள் கொடுத்த இந்த வரவேற்பு எங்களுக்கு பிரம்மிப்பாக இருந்தது. இந்த கலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது.

    இதுதொடர்பாக நானும் எனது குழுவினரும் எப்போதும் யோசித்து கொண்டே இருந்தோம். அப்போது தான், வார்லி என்ற ஓவிய வண்ணம் தீட்டும் முறையை பற்றி அறிந்தேன்.அந்த ஓவியத்தின் வாயிலாகவே நமது கலைகளையும், அதன் வடிவங்களையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்த விரும்பி வரைந்தேன். பின்னர் அதனை இந்தியன் புக் ஆப் ரெகார்ட்சுக்கு அனுப்பி வைத்தேன். இதற்கு எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்.

    பின்னர் அதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பினர் அங்கீகரித்து என்னை பாராட்டி சான்றிதழும் பதக்கங்களும் வழிங்கினர். இது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன், ஒயிலாட்ட கலை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதற்கு இது ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

    ×