search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivek Tiwari"

    உத்தரபிரதேசத்தில் ஆப்பிள் நிறுவன விற்பனை அதிகாரியை சுட்டுக் கொன்ற 2 போலீஸ்காரர்கள் நீக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #VivekTiwari #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஷானு (12), ஷிவி (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு விவேக் திவாரி தோழியுடன் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். நள்ளிரவு 1.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரது காரை நிறுத்துமாறு கூறினர்.

    ஆனால் அவர் காரை நிறுத்தாமல் சென்றதால் போலீஸ்காரர்கள் பிரசாத் சவுத்திரி, சந்தீப் ஆகியோர் ஆத்திரம் அடைந்து மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி சென்றனர்.


    பின்னர் கார் மீது பிரசாத் சவுத்ரி துப்பாக்கியால் சுட்டார். இதில் கார் கண்ணாடியை துளைத்துக் கொண்டு குண்டு விவேக் திவாரி மீது பாய்ந்துள்ளது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் என்கவுண்டர் செய்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

    உத்தரபிரதேச போலீஸ் உயர் அதிகாரி இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ்காரர்கள் பிரசாந்த் சவுத்ரி, சந்தீப் ஆகியோரை பணி நீக்கம் செய்து அவர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

    இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    விவேக் திவாரி கொல்லப்பட்ட சம்பவம் என்கவுண்டர் இல்லை. அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

    விவேக் திவாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவேக்கின் மனைவி கல்பனா கண்ணீருடன் கூறும் போது “என் கணவரை போலீசார் சுட்டுக் கொன்றது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா? என்பதற்கு முதல்-மந்திரி ஆதித்யநாத் நேரில் எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும்“ என்றார்.  #uppolice #VivekTiwari #VivekTiwariKilling #YogiAdityanath
    ×