search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village people struggle"

    ஊத்துக்கோட்டை அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது.

    இங்கிருந்து ஜெ.ஜெ.நகர், லட்சிவாக்கம், பேரண்டூர், சென்னங்காரணி, கண்டிகை, சூளமேனி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக தொடர் மின் வெட்டு காரணமாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று புகார் எழுந்தது.

    இந்தநிலையில் தொடர் மின்வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கருகிய நெற்கதிர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள துணை மின் நிலையம் எதிரே நேற்று ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்த், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    இதன் காரணமாக ஊத்துக்கோட்டை- பெரிய பாளையம் இடையே சுமார் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆண்டிப்பட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் கால்நடைகளுடன் போராட்டம் நடத்தினர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி யூனியனுக்குட்பட்ட 30 பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான கண்மாய்கள் மற்றும் சிறு குளங்கள் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே இங்கு தண்ணீர் வரத்து இருக்கும். எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க திப்பரவு அணை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்த எவ்வித முயற்சியும் மேற் கொள்ளாததால் வறட்சி காலத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    எனவே கம்பம் முல்லைப் பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிப்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி 47 கி.மீ தூரம் குழாய் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் இடம் பெற வில்லை.

    எனவே இப்பிரச்சினையை வலியுறுத்தி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்து கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 4-ம் நாளாக இன்று கொட்டப்பட்டி கிராமத்தில் கால்நடைகளுடன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    இதனால் ஆண்டிப்பட்டி யூனியனுக்குட்பட்ட பல கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு கோ‌ஷம் பலமாக எதிரொலித்து வருகிறது.

    ஊத்துக்கோட்டை அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிறிய வண்ணான் குப்பம்- பெரிய வண்ணான் குப்பம், ஆத்துபாக்கம்- தண்டலம் இடையே உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனை கண்டித்தும், உடனே சாலையை சீரமைக்க கோரியும் கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சியினர் பெரிய வண்ணான் குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென அவர்கள் தரையில் உருளும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் நக்கீரன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    28 நாட்களில் ரூ.60 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தேவாரத்தில் உயிர் பலி வாங்கிய மக்னா யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம், போடி மெட்டு, பொட்டிபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் தோட்டத்துக்கு வரும் இந்த யானை விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன் பொதுமக்களையும் விரட்டி வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேகர் என்ற தோட்ட தொழிலாளியை அடித்துக் கொன்றது. இந்த யானை இது வரை 9 பேரை காவு வாங்கிய பிறகும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தோட்ட தொழிலாளி சேகர் உயிரிழந்த பிறகு அவரது உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மற்ற யானைகள் நடமாட்டம் இப்பகுதியில் இருந்த போதும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் மக்னா யானை மட்டும் தொடர்ந்து உயிர்களை பலி வாங்கி வருகிறது.

    எனவே இந்த யானையை மயக்க மருந்து கொடுத்து வேறு பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்தார்.

    ஆனால் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று இரவு மீண்டும் மக்னா யானை அதே பகுதியில் புகுந்து தென்னை மற்றும் பலா தோட்டங்களை சேதப்படுத்தி சென்றது.

    எனவே தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரவு நேரங்களில் தோட்டங்களில் யாரும் தங்க வேண்டாம் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யானையின் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி தேவாரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×