search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Metro"

    • ஐ.சி.எப்.-ல் இதுவரை 21 வந்தே பாரத் ரெயில்கள் தயார் செய்யப்பட்டு ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பார்வையிடல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது, ரெயில் பெட்டிகள் தயாரிப்பின் ஆரம்பம் முதல் இறுதி கட்டப்பணிகள் வரை ரெயில்வே துறை அதிகாரிகள் நேரடியாக விளக்கினர்.

    இதைத்தொடர்ந்து, ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.சி.எப்.-ல் இதுவரை 21 வந்தே பாரத் ரெயில்கள் தயார் செய்யப்பட்டு ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 21-வது வந்தே பாரத் ரெயில் இன்று ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயில் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிக்னல், தண்டவாளம் உள்ளிட்டவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும்போது ரெயிலின் வேகத்தை அதிகரிக்க முடியும். இப்பணியை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. விரைவில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது, ஆக்ரா - டெல்லி இடையே மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில் ஓடுகிறது. தமிழ்நாட்டில் தற்போது 130 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதை 160-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயிலின் வடிவமைப்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த நிதி ஆண்டுக்குள் ஒரு ரெயிலையாவது தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம். படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதில், 80 ரெயில்களை ஐ.சி.எப். தயாரிக்க உள்ளது. மீதம் 120 ரெயில்கள் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள இந்திய ரெயில் பெட்டித்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. முதல் வகுப்பு ஏசி பெட்டி-1, 2-ம் வகுப்பு ஏசி பெட்டி-4, 3-ம் வகுப்பு ஏசி - 11 பெட்டிகளும் இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். ஆகஸ்டு மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரிக்க முடியுமா என்று தெரியவில்லை. எங்களுடைய குழு அதற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம்.

    அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரெயில் தயாரிப்பதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்கான, ரெயில்பாதை மேம்பாடு, சிக்கனல் தொழில்நுட்ப மேம்பாடு பணிகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. எனவே, அடுத்த 3 ஆண்டுகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். இதேபோல, மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

    வந்தே பாரத் ரெயில் தயாரிப்புக்கு தேவையான பாகங்கள் 90 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. புறநகர் மின்சார ரெயில்கள் போன்று, 'வந்தே மெட்ரோ' ரெயில் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளோம் சென்னை மட்டுமில்லாது ஐதராபாத்திற்கும் இந்தப்பெட்டிகளை தயாரித்து அனுப்ப உள்ளோம்.

    இந்த ரெயில் பெட்டிகள் தற்போதுள்ள பெட்டிகளை காட்டிலும் அகலமாக இருக்கும். 15 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் பயணம் செய்யமுடியும். வந்தே பாரத் ரெயில் விலங்குகள் மீது மோதும்போது ஏற்படும் பாதிப்பை தடுக்க ரெயிலின் முகப்பில் சில மாற்றங்களை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், ஐ.சி.எப்., தலைமை எந்திரப்பொறியாளர் பாபு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

    ×