search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UdayaChandran"

    • முதல் -அமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன், 24 மணி நேரம் தொடர் வாசிப்பு அரங்கத்தை திறந்து வைத்தார்.
    • சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் சிறப்புரையாற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் சங்கராபேரி திடலில் புத்தக திருவிழா நடைபெற்று வரு கிறது. 2-ம் நாளான நேற்று புகைப்பட கண் காட்சியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகி யோர் திறந்து வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து முதல் -அமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன், 24 மணி நேரம் தொடர் வாசிப்பு அரங்கத்தை திறந்து வைத்தார். சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் சிறப்புரை யாற்றினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    புத்தகம் என்பது ஒரு அனுபவ அறிவு. ஒருவர் இலங்கைக்கு சென்று இலங்கையை பற்றி எழுதிய ஒரு புத்தகத்தினை படிக்கும் போது நாம் இலங்கைக்கு செல்லாமலேயே இலங்கை பற்றிய அனுபவ அறிவை பெற்றுக் கொள்ள முடியும்.

    எனவே புத்தகம் வாசிப்பதன் மூலம் ஒரு வரின் அனுபவ அறிவினை நாம் பெற்று கொள்ள முடியும். புத்தகம் வாசிப்ப தன் மூலம் அறிவாற்றல் மற்றும் அனுபவ அறிவு வளரும். அனைத்து புத்தக அரங்கங்களுக்கும் சென்று தங்களுக்கு ஆர்வமுள்ள புத்தகங்களை அனைவரும் வாங்கி பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் பேசியதாவது:-

    பொருநை நதிக்கரையின் இரண்டு முக்கியமான கண்டெடுப்புகள் ஆதிச்ச நல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளாகும். பொருநை நதி நாகரீகம் கீழடியை விட 600 ஆண்டுகள் பழமையானது.

    பொருநை நதி நாகரீகம் 3,800 ஆண்டுகள் பழமையானது. பொருநை நதி அகழாய்வில் கிடைத்த தங்க அணிகலன்களை ஆராய்ந்து பார்த்த போது 92 சதவீதம் தங்கம் மற்றும் 8 சதவீதம் வெள்ளி கலவை யினால் உருவாக்கப் பட்டுள்ளது.

    இதன் நவீன தரக்குறியீட்டு வரிசைப்படி பார்த்தால் மிகச்சரியாக 22 காரட் என பொருந்தி வருகிறது. எனவே முத்துநகர் 22 காரட் தரம் கொண்ட நகரம் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள்.

    எனவே பொருநை நதி நாகரீகம் மிக பழமையானது என்பது குறித்து நெல்லை சீமை, முத்துநகர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    முத்துநகர் பகுதியில் தமிழரின் அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பண்டிதர்கள் எழுத்தை படைத்திருக்கலாம். அதனை பாதுகாத்த சாமானிய மனிதர்கள் தான்.

    சாமானிய மனிதர்கள் அடுத்த தலைமுறைக்கு மொழியை எடுத்து செல்கிறார்கள். தமிழ் மொழியை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு காரணம் சாமானிய மக்கள் தான்.

    பாரதி பிறந்த பின் தான் மொழியை நவீனமாக்கும் முயற்சி நடந்தது. மொழி யாக்கம் செய்வதில் பண்டிதர்களின் முயற்சியை விட சாமானியர்களின் முயற்சி காலம் கடந்து நிற்கும் என்பது வரலாறு.

    தாய் தெய்வ வழிபாடு குறித்து அதிகமாக பேசப்படு கிறது. சிந்து சமவெளி நாகரீகத்திலும் கிடைத்தது. ஆதிச்சநல்லூர் நாகரீ கத்திலும் கிடைத்துள்ளது.

    இரண்டுக்கும் இடையே உள்ள உருவ ஒற்றுமை குறித்து ஆய்வுகள் நடை பெற்று வருகிறது. இந்த பகுதியிலும் அம்மன் வழிபாடுகள் உள்ளன. இசக்கியம்மன் உள்பட ஒவ்வொரு பகுதியிலும் அம்மன் வழிபாடுகள் உள்ளன.

    சமூகவியல் ஆய்வா ளர்கள், ஒவ்வொரு அம்மனுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. நல்லதங்காளுக்கு பின்னால் சொத்துரிமை மறுக்கப்பட்ட பெண்ணின் சோகம் இருக்கிறது என்று கூறு கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண், அகால மரணம் அடைந்த பெண்ணை தெய்வமாக வழிபடுவது ஒவ்வொரு சமூகத்தின் இயல்பு. அது தமிழ் சமூகத்திலும் ஆழ்ந்து கிடக்கிறது.

    அம்மன் வழிபாட்டுக்கு பின் உள்ள சமூகவியல் காரணங்கள் குறித்து வேர்களை தேட வேண்டு மென்றால் கரிசல் மண் குறித்து ஆழமான ஆய்வு முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    ×