search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tharpanam ekadasi"

    வைகுண்ட ஏகாதசியான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, நமக்கு ஆசி வழங்குவார்கள்.
    ம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார். ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

    ‘‘உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, ‘மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று வேண்டினார் மன்னர்.

    ‘‘மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத் தான் தெரியும். அவரிடம் போ!” என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.

    மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.

    உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்: ‘‘வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். ‘இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.’

    ‘‘நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!” என்று சொன்னார் பர்வதர்.

    வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக்கூடிய ஏகாதசி இது.
    ×