search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjavur rain"

    தஞ்சை, நாகை, திருவாரூரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    டெல்டா மாவட்டங்களில் தஞ்சை, நாகை, திருவாரூரில் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன்பின்னர் சிலஇடங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்தது. தஞ்சையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தஞ்சை, திருவையாறு, வல்லம், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், அணைக்கரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்தால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களுக்கு நல்லது என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


    இதற்கிடையே தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், தலைஞாயிறு, தரங்கம்பாடி, கோடியக்கரை, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது.

    வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவே முதலே பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக இன்றும் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதேபோல் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

    திருவாரூரில் இன்று அதிகாலை 3 மணி முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், நன்னிலம், வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாகப்பட்டினம்-65.2
    திருவாரூர்-33.4
    வேதாரண்யம்-50.4
    நன்னிலம்-32
    தலைஞாயிறு-30
    வலங்கைமான்-20.6
    பாபநாசம்-3
    ×