search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tempo van"

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கேரளாவிற்கு டெம்போ வேன்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. #LorryStrick
    கோவை:

    இந்தியா முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இது போல் கோவை மாவட்டத்திலும் லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான லாரிகள் கோவையை அடுத்த வாளையாறு வழியாக கேரளாவுக்கு செல்வது வழக்கம். வேலைநிறுத்தம் காரணமாக அந்த லாரிகள் அனைத்தும் வாளையாறில் நிறுத்தப்பட்டுள்ளன.

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் தினமும் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து தினமும் 100 லாரிகளில் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் கோவைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

    ஆனால் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. ஆனால் 20-ந் தேதிக்கு முன்பு வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஏற்றிய 20 லாரிகள் நேற்றுக்காலை கோவை வந்தன. காய்கறி லாரிகள் என்பதால் அவற்றை யாரும் தடுக்கவில்லை. கோவை வந்த அந்த லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    ஆனால் பெரிய லாரிகளை இயக்க முடியாது என்பதால் கேரளாவில் உள்ள காய்கறி வியாபாரிகள் தங்களுக்கு சொந்தமான டெம்போ வேன்களில் கோவையில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு சென்றனர். கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் இருந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட டெம்போ வேன்களில் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இது குறித்து எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளன. மற்ற காய்கறிகளும் ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளன. கோவையில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை வியாபாரிகள் தங்கள் சொந்த டெம்போ வேன்களில் கொண்டு செல்கின்றனர். இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடையவில்லை.

    காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கேரளா செல்லும் டெம்போ வேன்களை இதுவரை யாரும் தடுக்க வில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களுக்கு கேரளாவுக்கு டெம்போ வேன்கள் மூலம் காய்கறி கொண்டு செல்ல முடியும். அதன்பின்னர் கோவை மார்க்கெட்டில் இருப்பு குறைந்த பிறகு கேரளாவில் காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

    கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகளை ஆட்டோக்கள், டெம்போ வேன்களில் கோவை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது அரசு பஸ்களிலும் காய்கறி மூட்டை களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவையின் சுற்று வட்டாரங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய எங்கும் கொண்டு செல்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் வெளிமாநிலங்களில் வரும் காய்கறிகள் தற்போது தடைபட்டு உள்ளது. அவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  #LorryStrick
    ×