search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple for girl"

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தில் இறந்த சிறுமிக்கு கோவில் கட்டி பொதுமக்கள் திருவிழா நடத்துகிறார்கள்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு வெள்ளையம்மாபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது45), டெய்லர். இவரது மனைவி லட்சுமி (37). இவர்களின் மூத்த மகள் தனுஜா. மற்றொரு மகள் காவியா (12).

    மூத்த மகள் தனுஜாவிற்கு கடந்த 2007-ம் ஆண்டு 4 வயதான போது, டிசம்பர் மாதம் 23-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மோட்டார் சைக்கிளில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பன்னாங்கொம்பு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பால்வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தனுஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தனுஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    பின்னர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தனுஜாவுக்கான ஈமச்சடங்குகள் நடைபெற்றது. அப்போது வேத மந்திரங்கள் கூறிக்கொண்டிருந்த ஐயர், தனுஜா போல பேசி தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், 3 ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் எனவும் அருள் வாக்கு கூறினார்.

    இதேபோல் 3 ஆண்டுகளுக்கு பின்னர் பழனிச்சாமியின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி தனக்கு கோவில் கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என்று அருள் வந்து கூறியுள்ளார்.

    இதையடுத்து பழனிச்சாமி, தனுஜாவிற்கு சுமார் 1½ அடி உயரத்தில் சிலை வைத்து தனுஜா அம்மன் என்ற கோவில் கட்டி வழிபாடு நடத்த தொடங்கினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழாவும் நடத்தப்பட்டு வந்தது. இதில் பால்குடம், பூக்குழி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தி பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவையொட்டி வெள்ளையம்மாபட்டி மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து பால் குடம் புறப்பட்டு, தனுஜா அம்மன் கோவிலை வந்தடைந்ததும் தனுஜா அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். பின்னர் பொங்கல் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

    தொடர்ந்து அன்னதானமும், இரவு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த அருள்வாக்கு பல்வேறு விதங்களில் தங்களுக்கு பலித்துள்ளதாக அங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். விபத்தில் இறந்த சிறுமிக்கு கோவில் கட்டி, பக்தர்கள் வழிபட்டு வருவது பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×