search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telugu Desam party volunteer"

    ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தியது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் அல்ல என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #JeganMohanReddy
    நகரி:

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்பி எடுக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். ஜெகன்மோகன் ரெட்டி செல்பிக்கு போஸ் கொடுத்தபோது அந்த வாலிபர் திடீரென்று கத்தியால் ஜெகன்மோகன் ரெட்டி மீது குத்தினார்.

    இதில் அவரது இடது கையில் கத்திக்குத்து விழுந்தது. தப்பி ஓட முயன்ற வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் சீனிவாஸ் என்பதும் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அந்த ஓட்டல் உரிமையாளர் ஹர்சவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் ஆவார்.

    எனவே தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் ஜெகன்மோகன் ரெட்டியை கொல்ல முயன்றதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

    இதற்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அமராவதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தியது அவரது தீவிர ரசிகர், அவர் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் அல்ல. சம்பவம் நடந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் விமான நிலையம் ஆகும். அவர்கள் திட்டமிட்டு நாடகம் நடத்திவிட்டு தெலுங்கு தேசம் கட்சி மீது குற்றம் சுமத்துகிறார்கள். அவர்களின் தமாசும், ஆட்டமும் என்னிடம் எடுபடாது. இதை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த ஒருவரை எப்படி விமானத்தில் ஏற்ற அனுமதித்தார்கள். அவர் விமானத்தில் ஏறாமல் விமான ஊழியர்கள் தடுத்திருக்க வேண்டும். அவர் விமான நிலைய போலீசாரிடம் புகார் செய்யவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவும் இல்லை. அவருக்கு நரேந்திர மோடி பாடம் கற்றுக் கொடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

    சம்பவம் நடந்ததும் கவர்னர், டி.ஜி.பியிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர் என்னிடம் தான் கேட்டிருக்க வேண்டும். எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒரு கேவலமான அரசியலை பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகார பிரதிநிதி விஜய்சாய் ரெட்டி கூறியதாவது:-



    ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த தாக்குதல் கொலை முயற்சி. அவர் எப்போதும் லட்சக்கணக்கான மக்களின் மத்தியிலேயே இருப்பார். எனவே அப்போது அவரை நெருங்க முடியாது என்பதால் விமான நிலையத்தில் வைத்து கத்தியால் குத்தியுள்ளனர். 5 மாதம் திட்டம் போட்டு இதை நடத்தியுள்ளனர்.

    கத்தியால் குத்திய சீனிவாஸ் வேலை பார்க்கும் ஓட்டல் உரிமையாளர் ஹர்சவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர். அவர் ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவுக்கு கார் ஓட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தாமலேயே அவர் ஜெகன்மோகன் ரெட்டி ரசிகர் என்று டி.ஜி.பி. கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை அவரது தாயார் விஜயலட்சுமி, நடிகை ரோஜா ஆகியோர் நேரில் பார்த்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். #ChandrababuNaidu #JeganMohanReddy
    ×