search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers hunger strike"

    சம வேலை, சம ஊதியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #TeachersProtest

    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாடு நிலவுவதை கண்டித்து சென்னையில் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2009-ம் ஆண்டுக்குப் பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு குறைவான சம்பளமும், அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான சம்பளமும் வழங்கப்படுகிறது.

    இந்த ஊதிய முரண்பாடை களைய வேண்டும் என்று கூறி இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ‘‘சமவேலைக்கு சம ஊதியம்’’ என்ற கோ‌ஷத்தை முன் வைத்து போராடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த 4000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காக கடந்த 24-ந்தேதி ஆசிரியர்- ஆசிரியைகள் குவிந்து இருந்தனர்.

    அவர்கள் சட்ட விரோதமாக கூடியதாக கூறி போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இங்கு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்டேடியத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அவர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அங்கு தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

     


    சிலர் குழந்தைகளுடனும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெட்ட வெளியில் மரத்தடியிலும் ஆங்காங்கேயும் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இரவில் கொட்டும் பனியிலும், விடிய விடிய போராட்டம் நீடிக்கிறது.

    உண்ணாவிரதம் இருப்பதால் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு களைப்படைந்து மயக்கம் ஏற்படுகிறது. அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்து வருகிறார்கள். இரவு வரை மொத்தம் 210 ஆசிரியர்- ஆசிரியைகள் மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 210 பேரில் 111 பேர் ஆசிரியை ஆவார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் தினகரன், தே.மு.தி.க. சார்பில் விஜய பிரபாகரன் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் துரைபாண்டியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதற்கிடையே அரசு பேச்சு நடத்தி கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தயார் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.ராபர்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர், அமைச்சர் ஆகியோர் எங்களுடன் பேச்சு நடத்த வேண்டும். கோரிக்கையை ஏற்பதாக உறுதி அளித்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

    இங்கே மரங்கள், செடி- கொடிகளுக்கு இடையே போராட்டம் நடத்துகிறோம். இரவில் பூச்சிகளுக்கு அஞ்சாமலும், கடும் பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடைபெறுகிறது.

    உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TeachersProtest

    ×