என் மலர்
நீங்கள் தேடியது "teacher transfers"
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே தேவனூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தேவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் அன்பு பணி மாறுதலில் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்று விட்டார்.
இந்த நிலையில் நன்றாக பாடங்களை நடத்திய ஆசிரியரை ஏன் மாற்றினர் என்றும் அந்த ஆசிரியரை மீண்டும் இதே பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் அன்பு பாடம் நன்றாக நடத்தினார். எங்களையும் நன்றாக அரவனைத்து சென்றார். அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவ, மாணவிகள் கண்ணீருடன் கூறினர்.
தேவனூர் பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மாணவர்கள்- பெற்றோர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம், பணிமாற்றம் செய்த ஆசிரியரை மீண்டும் இதே பள்ளிக்கு நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
அப்போது ஆசிரியர்களை சுழற்சி முறையில் தான் பணிமாற்றம் செய்யப்பட்டது என்றார். மேலும் இந்த பள்ளியில் 50 மணவர்களை சேர்த்து விடுங்கள் அதன்பிறகு அதே ஆசிரியரை இந்த பள்ளிக்கு அனுப்புகிறோம் என்றார். இதனை ஏற்ற பெற்றோர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களும் வகுப்புக்கு சென்றனர்.
இதனால் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது.






