என் மலர்
நீங்கள் தேடியது "Tamiln Nadu treacherous rule action"
திண்டுக்கல்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
நாம் அனைவரும் மதங்களை கடந்து தமிழர்கள், இந்தியர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு என்றுமே ஆதரவாக இருப்போம்.
வாக்குவங்கியை மனதில் வைத்துக்கொண்டு இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சிலர் அரசியல் பேசுகின்றனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்களுக்கு தெரியும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வழியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். மதவாத, சாதிய சக்திகளை அனுமதிக்கமாட்டோம்.

இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்.
தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி துரோகிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின் தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி கவிழும். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும்.
மீத்தேன், ஸ்டெர்லைட், சேலம்- சென்னை 8 வழிச்சாலை போன்ற மக்கள் விரோத திட்டங்கள் இல்லாத ஆட்சியாகவும், சகோதரத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் ஆட்சியாகவும் அமையும். மேலும் தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் ஆட்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #Jayalalitha






