search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooli Worker"

    நெல்லை கல்குவாரி விபத்தில் பலியானவாகளில் ஒருவரது உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர்.

    இதில் முருகன், விஜயன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம், மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். பாறைகளின் நடுவில் சிக்கிய 6-வது நபரான  ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் உடல் 8 நாள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது.

      இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமாரின் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்ற நிலையில் மற்றவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  அவர்களது உறவினர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் உடலை பெற்று செல்ல அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

     முன்னதாக குவாரி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான காசோலையை ராஜேந்திரனின் உறவினர்களிடம் இன்று கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    அப்போது ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், பாளை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மற்ற 2 பேரின் உறவினர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    ×