search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலப்பட்டா"

    • பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
    • கிராமமக்கள் சிலர் பணி நடைபெறும் பம்ப்செட் நோக்கி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு நிலப்பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு பெரம்பூர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 46 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    இதற்கு பெரம்பூர் கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தை தங்களது கிராமத்திற்கு வேறு திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததாக கூறி அவர்களும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே நேற்று இரவு 7 மணியளவில் பெரம்பூர் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட இடத்திற்கு குடிநீர் வழங்க அங்குள்ள பம்ப் செட் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு பெரம்பூர் கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பூர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் லட்சிவாக்கம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டதற்கும், குடிநீர் இணைப்பு வழங்க பள்ளம் தோண்டப்படுவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் அவர்கள் பெரம்பூர்-பாட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கிராமமக்கள் சிலர் பணி நடைபெறும் பம்ப்செட் நோக்கி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கிராமமக்களை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா உட்பட 3 போலீசார் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிராமமக்களின் போராட்டம் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கா கூடுதல் போலீசார் அங்கு வரவைழக்கப்பட்டனர். பின்னர் கிராமமக்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.

    பெரம்பூர் கிராம பகுதியில் இன்று காலையும் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பட்டா வழங்கப்பட்ட இடம் தொடர்பாக பெரம்பூர் கிராமமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    பாபநாசத்தில் அரையபுரம் தட்டுமால் படுகை கிராம விவசாயிகள் தாமதமின்றி நிலப்பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம்- தாசில்தார் பேச்சுவார்த்தையில் தீர்வு.
    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைபாபநாசம் மேலவீதி அண்ணா சிலை அருகில் நடத்தினர்.

    சங்க மாநில குழு உறுப்பினர் சாமு.தர்மராஜன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார்.

     இப்போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தில்லைவனம், ராஜேந்திரன், பரமசிவம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் மற்றும் பலர் பேசினர்.

    பாபநாசம் தாலுகா அரையபுரம் தட்டு–மால்படுகை கிராம விவசா–யிகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ரயத்து வாரியாக மாற்றம் செய்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி நில பட்டா வழங்கிட வேண்டும். 

    பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசலாறு தென்கரையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். பாபநாசம் படுகை, சாலையை முனீஸ்வரன் கோவில் முதல் சுடுகாடு வரை தார் சாலையாக மாற்றிட கோரியும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    உடனே சம்பவ இடத்திற்கு பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகிற 11.6.2022 அன்று நில அளவை துறை மாவட்ட உதவி இயக்குனரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். 

    பேச்சுவார்த்தையின் போது பாபநாசம் வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தனிப்பிரிவு ஏட்டு சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×