search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Technology Day"

    மதுரை சேர்மத்தாய்வாசன் கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப தினவிழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் பேசினார்.
    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப தினம் மற்றும் நூதன அடைவு மைய தொடக்க விழா நடந்தது. 

    கல்லூரி தலைவர் மாரீஸ்குமார், செயலாளர் கரிக்கோல்ராஜ், பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த விஞ்ஞானி டாக்டர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முதல்வர் கார்த்திகாராணி வரவேற்றார். 

    சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் கலந்து கொண்டு புதிய மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி நூலக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    நவீன உலகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க தொடங்கி விட்டனர். ஒரு துறை மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களின் சாதனை அதிகரித்து வருகிறது. 

    பெண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய முடியும். அந்த அளவுக்கு பெண்களுக்கு திறமை இருக்கிறது. பெண்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் முடியாது என்ற பதிலை கேட்க முடியாது. 

    முடியாததை கூட முடிக்கும் திறமை பெண்களிடம் இருக்கிறது. அவர்களிடம் தலைமைத்துவ பண்பு அதிகம் உள்ளது. பெண்கள் எதையும் பார்த்து பயப்படக்கூடாது. முயற்சி இருந்தால் கிராமப்புற பெண்களால் கூட எல்லாத்துறைகளிலும் சாதிக்க முடியும். 

    காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வேளாண்மை மற்றும் விண்வெளி துறையிலும் பெண்கள் அதிகம் சாதிக்க வேண்டும். புதிய, புதிய கண்டுபிடிப்புகளை அவர்கள் உருவாக்க வேண்டும். இது தொழில்நுட்பம் நிறைந்த உலகம் என்பதால்  அனைவரும் தொழில் நுட்பத்தை நன்றாக கற்றுக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு அதனை பயன்படுத்த வேண்டும். 

    கிராமப்புற மாணவி களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கல்லூரியில் பல திறமைகள் கொண்ட மாணவிகள் உருவாக வேண்டும். திறமைகளின் உறைவிடமே நமது பாரதம். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    முன்னதாக பாரா பேட்மிண்டன் போட்டியில் சர்வதேச அளவில் சாதித்த மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவை டாக்டர் கே.சிவன் பாராட்டி முதல் பரிசு வழங்கினார். அந்த மாணவிக்கு பல்வேறு அமைப்பின் சார்பில் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. 

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். இயற்பியல்துறை தலைவி கவிதா நன்றி கூறினார்.
    ×