search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன வசதி"

    • தேனி அருகே வாகன வசதி இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் நடவடிக்கையால் பள்ளிக்கு வந்தனர்
    • வாகன வசதியை ஏற்படுத்தி கொடுத்த தேனி கலெக்டர்

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி குரங்கணி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறைக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இங்குள்ள 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போடிக்கு சென்று கல்வி கற்று வந்தனர்.

    கடந்த கல்வி ஆண்டுகளில் ஆசிரியர்களே நிதி திரட்டி மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். ஆனால் இந்த ஆண்டு அதற்கான எந்த வசதியும் செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் தொடங்கிய நிலையில் சிறைக்காடு கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வாகனம் வரும் என்று காத்திருந்தனர்.

    ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களால் வாகன வசதி செய்து தர முடியாது. நீங்களாகவே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு சிறைக்காடு கிராம மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஏதேனும் குறைபாடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    மேலும் குழந்தைகளின் பெற்றோர்களிடமும் வாகனம் வருவது நிறுத்தப்பட்டால் தன்னிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கூறினார். இதனையடுத்து இன்று அந்த கிராமத்திற்கு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

    அதில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வழக்கம்போல் மாலையில் வீடுகளுக்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளி நிர்வாகம் உறுதி அளித்தது. மலை கிராம மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×