search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subhash Sarkar"

    • மத்திய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டால், மத்திய அரசு பரிசீலிக்கும்.
    • தமிழகத்தில் அரசியலுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்படுகிறது.

    கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 


    நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார். அது இன்றைய தேவையாக உள்ளதாகவும், பட்டம் பெறும் மாணவர்கள் கல்வியறிவு மட்டுமின்றி நமது பாரம்பரியம் கலாச்சாரம் குறித்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி சுபாஷ் சர்கார் கூறியுள்ளதாவது:

    தமிழக அரசும், மாநில கல்வி கொள்கையின் மூலம் தேசிய கல்விக் கொள்கையையே பின்பற்றியே வருகிறது. தேசிய கல்விக் கொள்கை ஆவணம் பொது மக்களின் பார்வைக்காக இணையதளத்தில் உள்ளது. 65 பக்கங்கள் கொண்ட அதனை படித்துப் பார்த்தால் தமிழக அரசின் கல்விக் கொள்கையிலும், தேசிய கல்விக் கொள்கையிலும் ஒற்றுமை இருப்பது தெரியவரும்.

    தமிழகத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கை மேலும் தரமாக இருந்தால் அதன் நல்ல அம்சங்களை தேசிய கல்விக் கொள்கையில் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.

    மத்திய கல்வித்துறை ஏற்கனவே சிறந்த கல்வி முறைகள் குறித்து பரிந்துரைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் சிறந்த கல்வி முறைக்கான பரிந்துரைகளை மத்திய கல்வித்துறை பெற்று வருகிறது.

    நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளின் கல்வி முறையாக மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மத்திய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக மத்திய அரசு பரிசீலிக்கும். அனைத்து உயர்கல்வியும் தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்.

    அதை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 12 மாநில மொழிகளில் பொறியலுக்கான கேள்வி தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு புத்தகங்கள் அனைத்தும் தமிழ் உட்பட 12 மாநில மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×