search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student recovery"

    சேலம் அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம், கருப்பூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களது மகன் சதீஸ் (வயது 18). இவர் கருப்பூர் பகுதியில் தனியார் மெட்ரிக்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சதீஸ் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பள்ளிக்கு செல்லாமல் அவ்வபோது விடுமுறையும் எடுத்து வந்தார். பள்ளிக்கு போகமாட்டேன் என்றும் அடம் பிடித்து வந்தார். படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்ததால் கவலை அடைந்த பெற்றோர், சதீசை சத்தம் போட்டனர்.

    படிக்க விருப்பம் இல்லாமல் இருந்து வந்த சதீஸ் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோர் மாதம் 8-ந்தேதி வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகன் எங்கு சென்றான்? என அக்கம், பக்கத்து வீடுகளில் விசாரித்தபோது, அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டனர்.

    இதையடுத்து பரிதவித்தப்படி மகனை பெற்றோர், ஊர், ஊராக சென்று பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை, உறவினர்கள் வீடுகள், நண்பர்கள் வீடுகளிலும் தேடினர். ஆனால் சதீஸ் அங்கும் செல்லவில்லை.

    மகன் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என எதுவும் தெரியாததால் சோகம் அடைந்த நிலையில் பெற்றோர் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் தன்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக சதீஸ் பெங்களூரு, திருப்பதி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளுக்கு மாறி மாறி சென்று காப்பகத்தில் தங்கி உணவு சாப்பிட்டு வந்தார். கையில் இருந்த பணமும் தீர்ந்தது. இதனால் சதீஸ் வேலை கேட்டு பல்வேறு கம்பெனிகளுக்கு அலைந்து திரிந்தார். வேலை கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் ஆதார் அட்டை கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆதார் அட்டை இல்லை என்றால் வேலை கிடையாது என்றும் கூறி விட்டனர்.

    இதையடுத்து சதீஸ் கடைசியாக சென்னைக்கு சென்று அங்கும் வேலை கேட்டு திரிந்தார். அங்கும் ஆதார் அட்டை கேட்டதால் என்ன? செய்வது என தெரியாமல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் என அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தார். வேலை கிடைக்காததால் சாப்பாடுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் ஆதார் அட்டை கேட்க முடிவு செய்த சதீஸ் தனது செல்போனில் வேறு ஒருவர் பேசுவது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் மீனாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது மீனாவிடம், உனது மகன் இருக்கும் இடம் எனக்கு தெரியும். அதனால் வாட்ஸ்-ஆப்பில் உங்களது மகனின் ஆதார் அட்டையை அனுப்பி வையுங்கள். அதன் பிறகு உங்கள் மகன் இருக்கும் இடத்தை பற்றிய விபரத்தை தெரிவிக்கிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டார். ஆனால் மீனா மகனின் ஆதார் அட்டையை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைக்கவில்லை. மறுபடியும் போன் செய்து ஆதார் அட்டையை சதீஸ் கேட்டார்.

    பின்னர் மீனாவின் செல்போன் வாட்ஸ்-அப்புக்கு சதீஸின் புகைப்படம் வந்தது. மகனை பார்த்த சந்தோ‌ஷத்தில் ஆதார் அட்டையை அனுப்பி வைக்க முடிவு செய்த மீனா, இது குறித்து தனது கணவர் நடராஜியிடம் தெரிவித்தார். சந்தேகம் அடைந்த நடராஜ் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கரிடம் புகார் அளித்தார்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார், மீனாவின் செல்போனில் பேசிய நபர் யார்? என்பது குறித்து ஆய்வு செய்ததில், சதீஸ் தான் பேசியது தெரியவந்தது. அவர் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், நேராக சென்னைக்கு சென்று செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர்.

    அப்போது சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்த சதீஸை போலீசார் பிடித்து சேலம் கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மகனை பார்த்த சந்தோ‌ஷத்தில் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அத்துடன் பாசத்துடன் மகனை கட்டி தழுவி முத்தமிட்டனர். மகனை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நடராஜ்-மீனா தம்பதியினர் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். #tamilnews
    கண்ணமங்கலத்தில் பள்ளிக்கு செல்லவதாக கூறிவிட்டு சென்ற மாணவன் சென்னையில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    கண்ணமங்கலம்:

    சென்னை அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன், அய்யப்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது தந்தை கண்ணமங்கலம் துரிஞ்சிக்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைக்க அங்கு அழைத்து வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த ஜூன் மாதம் அவனை சேர்த்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சந்தவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் மாணவனை தேடி வந்தனர். அப்போது சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் மாணவன் தங்கியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், அங்கு சென்று மாணவனை மீட்டு வந்தனர். போலீஸ் விசாரணையில், சென்னையில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க சென்றபோது கதவு பூட்டி இருந்ததால் நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாக மாணவன் கூறினான். பின்னர் மாணவனை, அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். #tamilnews
    ×