என் மலர்
நீங்கள் தேடியது "Sterlite Industries"
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு 10 பேர் பலியானதை கண்டித்து மாவட்டம் முழுவதும் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. பஸ்களும் இயக்காமல் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. #Thoothukudi #SterliteProtest
தூத்துக்கடி:
போராட்டக்காரர்களும், போலீஸ்காரர்களும் பல இடங்களில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அலை, அலையாக வந்து குவிந்ததால் அவர்களது முற்றுகைப் போராட்டத்தை போலீஸ்காரர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.
சுமார் 5 ஆயிரம் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றதால் அவர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். இதைத் தொடர்ந்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் அதிகரித்தது. அப்போது போலீஸ்காரர்கள் தடியடி நடத்தினார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், போராட்டக்காரர்களை விரட்டி, விரட்டி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 10 பேர் பலியானார்கள்.

போராட்டத்தின் போது 110 வாகனங்கள் தீ வைத்தும், அடித்தும் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானதால் கோபம் தணியாத பொதுமக்கள் தூத்துக்குடியில் ஆங்காங்கே சில இடங்களில் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பக்கத்து மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
சுமார் 4 ஆயிரம் போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று மாலைக்கு பிறகு அமைதி திரும்பியது. என்றாலும் மக்கள் மத்தியில் பீதியும் பதட்டமும் குறையவில்லை.
போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசை அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். இன்று அவர்கள் தூத்துக்குடிக்கு சென்று முகாமிட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் அமைதி திரும்ப செய்வதற்காக தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்து இருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

ஒட்டப்பிடாரம், புதியம் புத்தூர், முத்தையாபுரம், ஸ்ரீவைகுண்டம, புதுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டதால் தூத்துக்குடியில் இன்று எந்த ஒரு வர்த்தகமும் நடக்கவில்லை. அனைத்து வியாபார பணிகளும் முற்றிலுமாக முடங்கியது.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தகுந்த நியாயம் கிடைக்கும் வரை தூத்துக்குடியில் காலவரையற்ற முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி நகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மருந்து கடைகளும், சில பெட்டிக்கடைகளும் மட்டுமே திறந்திருந்தன.

மதுரை, நெல்லை, திருச்செந்தூர், நாகர்கோவில் உள்பட தூத்துக்குடிக்கு எந்த ஒரு பஸ்சும் வரவில்லை. இதனால் தூத்துக்குடி நகரம் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட மாதிரியான சூழ்நிலையில் உள்ளது.
தூத்துக்குடியில் இன்று சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு எந்த பஸ் சேவையும் நடக்கவில்லை. இத்தகைய காரணங்களால் தூத்துக்குடி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை மாவட்ட மீனவர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. #Thoothukudi #SterliteProtest #SterliteKillings #Tuticorin






