search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan Marines"

    • இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறை பிடித்துச் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரைகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    100 கி.மீட்டருக்கு மேல் கடற்பரப்பை கொண்ட இந்த மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மீனவ சமுதாயம் வசித்து வருகிறது. இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலையே நம்பியுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து சில மைல் கடல் தொலைவில் அண்டை நாடான இலங்கை அமைந்துள்ளது. இதனால் சர்வதேச கடல் பகுதியாக விளங்கி வருகிறது.

    இந்திய கடலோர காவல் படையினரும், இலங்கை கடற்படையினரும் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறை பிடித்துச் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த மாதத்தில் மட்டும் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததோடு 10 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    2 வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதன் காரணமாக ராமேசுவரத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 50 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.

    இந்நிலையில் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு புறப்பட்டனர். ஆனால் கடலுக்கு சென்ற 2 நாட்களிலேயே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த வாரம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேலை நிறுத்தம், இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் நவம்பர் மாதத்தில் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் சில நாட்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இதனால் அவர்கள் போதிய வருமானமின்றி தவித்தனர். குடும்பத்தை நடத்த கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலையில்லாத மீன்பிடி தொழிலை நம்பி இருக்க முடியாது என எண்ணிய ராமேசுவரம் மீனவர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வழக்கமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கட்டிட வேலைக்கு செல்ல குறிப்பிட்ட இடத்தில் தொழிலாளர்கள் குவிவார்கள். அங்கு வந்து வேலைக்கு ஏஜெண்டுகள் ஆட்களை ஏற்றிச்செல்வார்கள்.

    தற்போது கட்டிட வேலைக்கு மீனவர்களும் செல்வதாக தெரிகிறது. இதனால் காலையிலேயே தொழிலாளர்கள் நிற்கும் இடத்தில் மீனவர்களையும் பார்க்க முடிகிறது. அவர்கள் ஏஜெண்டுகளிடம் ஏதேனும் ஒரு வேலை கொடுங்கள் என்று சென்று வருகின்றனர்.

    இதேபோல் பல மீனவர்கள் மாற்று தொழிலுக்கு வேறு மாவட்டங்களுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் ராமேசுவரத்தில் வரும் காலங்களில் மீன்பிடி தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×