search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "solve problem"

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மாயனூரில் தடுப்பணை இருந்த போதிலும் எங்கள் பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வர வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆழ்குழாய் கிணறு அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அப்பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும் குடிநீர் தட்டுப்பாட்டால் மாணவர்கள் அவதியடைவது குறிப்பிடத்தக்கது.

    எங்கள் பகுதியில் 6 ஆண்டுகளாக சாக்கடை தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் பரவுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. எனவே சாக்கடையை தூர்வாரி வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மாயனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சேதமடைந்திருக்கும் உயர்கோபுர மின்விளக்கினை சீர் செய்து தர வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். முன்னதாக மாயனூர் பொதுமக்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பேனரை ஏந்தி கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். இதனை கண்காணித்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி 5 பேரை மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்க அனுப்பினர்.

    இதேபோல் மணவாசி கிராம மக்கள் கொடுத்த மனுவில், கீழமாயனூர் காவிரி ஆற்றில் போடப்பட்ட உறை கிணறுகளை ஆழப்படுத்தி குடிநீர் பிரச்சினையை எங்கள் பகுதியில் தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள கால்வாயில் கடந்த மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மாரியம்மன்கோவில் தெரு, செல்லாண்டிஅம்மன் நகர், ஜூப்லி நகர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. மழைநீர் செல்வதற்கான வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது அந்த பகுதியில் கட்டப்படும் பாலத்தினை விரிவுபடுத்தி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாந்தோன்றி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் தனது குடும்பத்தினருடன் வந்து கொடுத்த மனுவில், தாந்தோன்றியிலுள்ள எனது தோட்டத்திற்கு செல்ல வழியில்லாமல் செய்யும் வகையில் ஒரு அரசு அலுவலகம் கட்ட ஏற்பாடு நடக்கிறது. எனவே எனக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் புன்னம் குளத்தூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கும் கல்உடைக்கும் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு, நிலம் கிடையாது. இதனால் நாங்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி அருகேயுள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த கல்கண்டு வியாபாரி முத்துசாமி(வயது 47), 10 ரூபாய் நாணயங்களை கையில் ஏந்தியபடியே சென்று கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், நான் கல்கண்டு வியாபாரம் செய்வதற்காக அடிக்கடி கரூர் வருகிறேன். கரூர்- சின்னதாராபுரம் இடையே செல்லும் அரசு பஸ் உள்ளிட்ட சில பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சில சமயங்களில் பாதிவழியில் கூட இறக்கி விடுகின்றனர். எனவே அரசு- தனியார் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்பதை தெளிவுபடுத்தி, மாவட்ட நிர்வாகம் அதனை புழக்கத்தில் இருக்கும்படி செய்ய வேண்டும். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்ரமணியம், ஆதிதிராவிட நல அதிகாரி ஜெ.பாலசுப்ரமணியம் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் 
    ×