என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவரம்"

    • வடபெரும்பாக்கம் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
    • ஜி.என்.டி. சாலை வழியாக ஆந்திராவுக்கு செல்வது வழக்கம்.

    சென்னை:

    சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் வடபெரும்பாக்கம் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

    இதன் காரணமாக வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாதவரத்தில் இருந்து ஜி.என்.டி. சாலை வழியாக ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் வடபெரும்பாக்கம் சாலை வழியாக செங்குன்றம் சென்று, பின்னர் ஜி.என்.டி. சாலை வழியாக ஆந்திராவுக்கு செல்வது வழக்கம்.

    தற்போது வடபெரும்பாக்கம் சாலையில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் வடகரை, விளாங்காடுபாக்கம், அழிஞ்சிவாக்கம், ஞாயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வடபெரும்பாக்கம் வழியாக சென்னைக்குள் வர முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.

    அவர்கள் சுமார் 4 கி.மீ. தூரம் சுற்றி கொசப்பூர் சாலை வழியாக மீண்டும் ஜி.என்.டி. சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் வடகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் சென்னைக்கு வர இன்று காலையில் தங்கள் வாகனங்களில் வடபெரும் பாக்கம் சாலை வழியாக வந்தனர். அப்போது சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவர்கள் மீண்டும் புழல் சென்று ஜி.என்.டி. சாலை வழியாகவும், மற்றும் சிலர் கொசப்பூர் சாலை வழியாகவும் சென்றனர். இதனால் அவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    சென்னையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் வடபெரும்பாக்கம் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இந்த சாலையானது மாதவரம் தொகுதிக்குள் வருகிறது. இந்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் அதன் வழியாக மழைநீர் செல்லாமல் சாலையிலேயே தேங்கி கிடக்கிறது.

    இதனால் ஒவ்வொரு முறையும் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி புழல் ஏரி கால்வாயில் விடுகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×