என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் சுரேஷ்கோபி"
- திரும்பிச் செல்ல வாகனம் வராததால் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்தார்.
- போலீசாரின் பைலட் வாகனம் வரவும் தாமதமானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில், திருச்சூர் தொகுதியில் மட்டும் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றிபெற்று எம்.பி.யானார்.
அவரது வெற்றி கேரளாவில் பா.ஜ.க. காலூன்ற செய்தது. இந்த பெருமையை பெற்றுத்தந்த சுரேஷ்கோபிக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவர் மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு துறை இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
மத்திய மந்திரி என்ற முறையில் கேரளாவில் நடக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் சுரேஷ் கோபி பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், திரும்பிச் செல்ல அதிகார பூர்வ வாகனம் வராததால் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்தார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரி பாட் நாகராஜா கோவிலில் நடந்த பூஜையில் மத்திய மந்திரி சுரேஷ்கோபி நேற்று பங்கேற்றார். பின்பு அங்கிருந்து திரும்பிச் செல்ல நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அவரை அழைத்துச் செல்ல அவரது அதிகார பூர்வ வாகனம் வரவில்லை.
மேலும் பாதுகாப்புக்காக வரும் போலீசாரின் பைலட் வாகனம் வரவும் தாமதமானது. சிறிதுநேரம் காத்துநின்ற சுரேஷ் கோபி, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆட்டோவில் சென்று கொண்டிருந்ததை அறிந்த பைலட் மற்றும் மத்திரியின் அதிகாரபூர்வ வாகனம், அவர் சென்ற வழியில் பின்தொடர்ந்து சென்றன.
சிறிது தூரததிற்கு பிறகு சுரேஷ்கோபி சென்ற ஆட்டோவை பைலட் மற்றும் அதிகாரபூர்வ வாகனம் சென்றடைந்தது. அதன்பிறகு அதிகாரபூர்வ வாகனத்தில் சுரேஷ் கோபி பயணித்தார்.
காவல்துறையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தான், மத்திய மந்திரி ஆட்டோவில் பயணிக்க காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியிருக்கிறது.






