என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் ஸ்ட்ரா"
- ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவோர் பலர் உண்டு.
- காகித ஸ்ட்ராவில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளது.
குளிர்பானங்கள் போன்ற திரவ வகை உணவுகளை அருந்தும்போது, ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவோர் பலர் உண்டு. அவை பிளாஸ்டிக்கால் தயாரானவையாகவே இருந்தன. உலகளவில் ஆண்டுதோறும் 460 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் மாசுவும் அடங்கும். இதை கருத்தில் கொண்டு இந்தியா உட்பட பல நாடுகள், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு தீர்வாக, காகித ஸ்ட்ராவுக்கு மாறியுள்ளன.
இந்த காகித ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை, மக்கும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்கை ஒப்பிடும்போது, மண்ணில் சிதைவதற்கு மூன்று முதல் ஆறு வாரங்கள் மட்டுமே ஆகும்.

தாவரம் மற்றும் மூங்கில் போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் காகித ஸ்ட்ராக்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் சமீபத்திய ஒரு ஆய்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
காகித ஸ்ட்ராவில் நச்சு மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக பெல்ஜிய விஞ்ஞானிகள் நாடு முழுவதும் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் காகிதம், மூங்கில், பிளாஸ்டிக் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட 39 வகையான ஸ்ட்ராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் பரிசோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து ஸ்ட்ராக்களிலும் பாலி புளூரோ அல்கைல் பொருட்களின் (பி.எப்.ஏ.எஸ்) கலவைகள் இருந்தன. அதிலும் காகித ஸ்ட்ராக்களில் பிளாஸ்டிக்கை விட அதிகமான ரசாயனங்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பாலி புளூரோ அல்கைல் நீரில் அதிகமாக கரையக்கூடியது என்பதும், இதனால் ஸ்ட்ராக்களில் கலந்திருக்கும் அது பருகும் பானத்துடன் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
முதன்முதலில் 1888-ம் ஆண்டில், அமெரிக்கரான மார்வின் செஸ்டர் ஸ்டோன் என்பவர்தான் காகிதத்தை பயன்படுத்தி ஸ்ட்ராவை உருவாக்கினார். அந்த காலத்தில் அது பிரபலமாக இருந்தது.
ஆனால் எதிர்மறையான விளைவுகளை தந்தது. அதாவது காகித ஸ்ட்ரா, பானத்தின் சுவையை மாற்றி வித்தியாசமான ஒரு சுவையை கொடுத்தது. அதன் பின்னர்தான், காகித ஸ்ட்ராக்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படவே மீண்டும் காகித ஸ்ட்ராக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்தநிலையில் அதில் கலந்திருக்கும் பாலி புளூரோ அல்கைல் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
கருவுறுதல் குறைவதற்கும், கர்ப்பிணிப் பெண்களிடத்தில் உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாடுகள், விரைவாக பருவமடைதல், எலும்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கும்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவும், உடல் பருமன் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட பெரும்பாலான ஸ்ட்ராக்களில் ரசாயனங்கள் கண்டறியப்பட்டாலும், அவை மனிதர்களுக்கு உடனடி ஆபத்தை விளைவிப்பதில்லை.
காலப்போக்கில் பாதிப்பை அதிகப்படுத்தும். எனவே ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.






