என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷூக்கள் கடத்தல்"

    • ஷோரூம் நிர்வாகிகள் ஜிபிஎஸ் மூலமாக லாரி நிற்கும் இடத்தை கண்டறிந்தனர்.
    • போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் அடுத்துள்ள செட்டிஅள்ளி என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ ஷோரூம் உள்ளது.

    இங்கு லாரி டிரைவராக வேலை பார்த்து வரும் அகமத் (வயது 30) என்பவர் ஷோரூமில் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 1,558 ஜோடி ஷூக்களை ஒரு லாரியில் ஏற்றி கொண்டு பெங்களூர் அருகே உள்ள அணுகுண்டன அள்ளி சௌக்கிய சாலையில் உள்ள மிந்த்ரா என்ற குடோனுக்கு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் அகமத்தும் அவரது நண்பர்களும் ஏற்கனவே திட்டமிட்டபடி ஷூக்கள் இருந்த லாரியை குடோனுக்கு கொண்டு செல்லாமல் ராஜா பாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்று அங்கு ஷூக்களை மறைத்து வைத்துள்ளனர்.

    ஷூக்கள் ஏற்றி சென்ற லாரியை அந்த பகுதியில் உள்ள ஒரு சாலையில் நிறுத்தி விட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். உரிய நேரத்தில் குடோனுக்கு ஷூக்கள் கொண்டு செல்லப்படாததால் ஷோரூம் நிர்வாகிகள் ஜிபிஎஸ் மூலமாக லாரி நிற்கும் இடத்தை கண்டறிந்தனர்.

    அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று லாரியை திறந்து பார்த்த போது லாரிக்குள் ஷூக்கள் ஏதும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஷோரூம் நிர்வாகத்தினர், அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் ஷூக்களை கடத்தி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஷூக்களை கடத்திய சுபான் பாஷா (30) மன்சூர் அலி (26) மற்றும் சஹீத்துல் ரகுமான் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் ராஜாபாளையம் பகுதியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ஷூக்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் அகமத் மற்றும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் அத்திப்பள்ளி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×