என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர் மாற்றம்"
- பணியில் இருந்த போலீஸ்காரர் கட்சி தலைவருடன் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- போலீஸ்காரர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி:
'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இவர் கடந்த 27-ந்தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். கூடலூரில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, அன்று மாலை ஊட்டிக்கு வந்து சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ஏ.டி.சி திடல் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் பணியில் இருந்த ஹில்காப் போலீஸ்காரர் கணேசன் கூட்டத்துக்குள் நுழைந்து அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
அவர் சீருடையில் அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. மேலும் பணியில் இருந்த போலீஸ்காரர் கட்சி தலைவருடன் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீஸ்காரர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, அரசுப் பணியாளர்கள், தாங்கள் பணியில் இருக்கும் போது அரசு தொடர்பில்லாத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க கூடாது என்பது விதி.
இதை மீறி சீருடையில் அண்ணாமலையுடன் போலீஸ்காரர் கணேசன் புகைப்படம் எடுத்திருக்கிறார். எனவே ஒழுங்கு நடவடிக்கையாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றனர்.






