என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு பஸ்நிலையம்"

    • தற்காலிகமாக பஸ் நிலையத்தை திறந்தாலும் அதில் தார்சாலை அமைக்காததால் புழுதி பறக்கிறது.
    • சாலையில் வேகத்தடைகள் அமைத்து தனியார் பஸ்களை மெதுவாக செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை இன்று நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் திடீரென ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திப்பு பஸ் நிலையத்தை திறப்பதாக நேற்று நாடகம் நடத்தியுள்ளனர். தற்காலிகமாக பஸ் நிலையத்தை திறந்தாலும் அதில் தார்சாலை அமைக்காததால் புழுதி பறக்கிறது. இதனால் பொதுமக்களும், கடை வைத்திருப்பவர்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    பஸ் நிலையம் கட்டுமான பணிக்காக தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தார் சாலை அமைத்து அதில் நிறுத்தங்கள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் அதனை தவிர்த்து ராஜா பில்டிங் பகுதிகளில் 5 நிறுத்தங்கள் அமைத்துள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏற்கனவே 5 ஆண்டுகளாக பஸ் நிலையம் திறக்கப்படாததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தற்போது பஸ் நிறுத்தத்தையும் அந்த இடத்தில் அமைத்ததோடு அங்கு பணியில் இருக்கும் போலீசார், பொது மக்கள் மட்டும் தான் அந்த இடத்தில் நிற்க வேண்டும். கடைகளுக்கு வரும் பொது மக்கள், வியாபாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களது மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் நிறுத்தக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

    இப்படி கட்டுப்பாடுகள் விதித்தால் அந்த பகுதியில் உள்ள வியாபார தளங்களில் வியாபாரம் எப்படி நடக்கும்?. ஏற்கனவே அவர்கள் வங்கி கடன் உள்ளிட்டவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்தவிதமான வசதிகளும் இந்த பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இந்த சாலையில் வேகத்தடைகள் அமைத்து தனியார் பஸ்களை மெதுவாக செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். பஸ் நிலையத்தின் மீதான வழக்கை விரைவில் முடித்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரை நீக்க சிறப்பு வக்கீல் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நீக்க முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகம், பஸ் நிலையம் மீது போடப்பட்டுள்ள வழக்கை சிறப்பு வக்கீல் நியமித்து சீக்கிரமாக முடிக்க மறுப்பது ஏன்?.

    வ.உ.சி. மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே மேற்கூரை சரிந்து விழுந்து உள்ளது. அதை கட்டிய அதே ஒப்பந்ததாரர் தான் பாளை மார்க்கெட், நேருஜி கலையரங்கம் பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே அதனையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர்கள் திருத்துச் சின்னத்துரை, சிந்து முருகன், மேகை சக்திகுமார், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் ஜெய்சன் புஷ்பராஜ், மேலப்பாளையம் பகுதி பாசறை சம்சு சுல்தான், ஐ.டி. விங் விக்னேஷ், வாஸ்து தளவாய், தங்க பிச்சையா, சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×