என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்பவானிவாய்க்கால்"

    • கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
    • இன்று 4-வது நாளாக விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பெருந்துறை:

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது. அவ்வாறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று விவசாயிகளின் ஒரு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    இதனைத்தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்குட்பட்ட கூரபாளையம் பிரிவு ஈரோடு ரோட்டில் கடந்த 7-ந்தேதி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 4-வது நாளாக விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று பா.ஜனதா மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சரஸ்வதி, பா.ஜனதா விவசாய பிரிவு மாநில தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தயார் நிலையில் ஒரு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 4-வது நாளாக போராட்டம் நீடித்து வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×